search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா
    X
    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

    எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தினால் நாடு தானாக முன்னேறும் - அமித் ஷா சொல்கிறார்

    எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதியில் கவனம் செலுத்தினால், நாடு தானாக முன்னேறும் என்று அமித் ஷா கூறினார்.
    காந்திநகர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, தனது சொந்த தொகுதியான குஜராத் மாநிலம் காந்திநகருக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

    பின்னர், மகாத்மா மந்திர் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் கவனம் செலுத்தினால், நாடு தானாக முன்னேறும். நான் அதிர்ஷ்டசாலி. இதற்கு முன்பு, காந்திநகர் எம்.பி.க்களாக இருந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இங்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். எனவே, எம்.பி. என்ற முறையில் எனது பணி எளிதாகி விட்டது.

    எனது முன்னுரிமை பணி, எப்போதும் காந்தி நகரும், அதன் மக்களும்தான். இந்த தொகுதியை நாட்டிலேயே முதன்மை தொகுதியாக மாற்றுவதுதான் எனது நோக்கம்.

    ‘வறுமையை ஒழிப்போம்’ என்று காங்கிரஸ் கட்சி, வெறுமனே வாயளவில் பேசி வருகிறது. ஏழைகளின் நிலைமையை முன்னேற்ற எதுவுமே செய்யவில்லை.

    ஆனால், பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவரால்தான், 50 கோடி பேருக்கு பலனளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற திட்டத்தை தொடங்க முடியும். இந்த திட்டப்படி, 50 கோடி பேருக்கு ரூ.5 லட்சம்வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவரால்தான் இதுபோன்ற திட்டங்களை சிந்திக்க முடியும். பிரதமர் மோடி, ஏழைக்குடும்பத்தில் பிறந்ததால் எப்போதும் ஏழைகளைப் பற்றியே சிந்திப்பார்.

    காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்காக ஏதாவது செய்திருந்தால், நாங்கள் இந்த திட்டங்களை தொடங்க வேண்டி இருந்திருக்காது.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.
    Next Story
    ×