search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் உள்ள வாக்கு எண்ணும் மையம்
    X
    மும்பையில் உள்ள வாக்கு எண்ணும் மையம்

    மகாராஷ்டிரா, அரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- பாஜக கூட்டணி முன்னிலை

    மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
    மும்பை:

    முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்திலும், முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிற அரியானா மாநிலத்திலும் கடந்த 21-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 

    288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    90 இடங்களைக் கொண்ட அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் (பாரதீய ஜனதா), முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா (காங்கிரஸ்), அபய் சிங் (இந்திய தேசிய லோக்தளம்), ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்பட 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

    இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்தப துகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. காலை 8.30 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 112 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. அரியானாவில் பாஜக கூட்டணி 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. 

    மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், அரினானா முதல்வர் கட்டார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், அரியானாவிலும் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பான்மையான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×