search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதி பெறாத குடியிருப்பு பகுதி
    X
    அனுமதி பெறாத குடியிருப்பு பகுதி

    டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளை அங்கீகரிக்க மத்திய அரசு முடிவு

    சுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் டெல்லியில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அனுமதி இல்லாத  குடியிருப்பு பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

    எவ்வித அனுமதியும் இல்லாமல் இப்படி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் நடவடிக்கைகளை டெல்லி அரசு அவ்வப்போது எடுத்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் வழக்கு தொடர்வதும், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    இடிப்பு நடவடிக்கை

    இப்படிப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எல்லாம் முறைப்படுத்தி அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்து வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    வரும் நவம்பர் மாதம் 18-ம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    மேற்கண்ட 1,797 குடியிருப்பு பகுதிகளும் குறைந்த வருமானத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளன.
    வசதி படைத்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் இந்த வரையறைக்குள் வராது என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டார்.

    இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்ற நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×