search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் கனமழை
    X
    கர்நாடகாவில் கனமழை

    கர்நாடகா, ஆந்திராவில் கொட்டித் தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

    கர்நாடகா, ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
    பெங்களூரு:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கர்நாடகத்தின் தார்வாட், பெலகாவி, கலபுர்சி, கதக், விஜயபுரா, பாகல்கோட், சிவாமாக்கா, சிக்மகளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    சாலைகள், பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. தலைநகர் பெங்களூருக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

    பெலகாவி, கடாக், கோப் பாய் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கன மழைக்கு 5 பேர் பலியாகினர். அங்கு ஏற்கனவே மழையால் கடந்த 3 நாட்களில் மட்டும் 7 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    கன மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்நிலையில் வருகிற 22-ந்தேதி வரை மிதமானது முதல் கன மழை வரை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஆந்திரா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அங்கு கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி நகரில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. விசாகப்பட்டினத்தில் 16 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×