search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    மின்னணு வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்தும் பாஜக- சித்தராமையா குற்றச்சாட்டு

    மின்னணு வாக்கு எந்திரங்களை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரசாரத்திற்காக சென்றபோது, மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூரில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் வரை நான் காரில் பயணம் செய்தேன். அங்கு ரோடு மிக மோசமான நிலையில் இருந்தது. மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அங்கு சாலைகளின் தரம் மோசமாக உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மராட்டிய மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. மக்கள் எப்படி பா.ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பா.ஜனதா எப்படி வெற்றி பெறுகிறது என்றும் எனக்கு தெரியவில்லை. அவர்கள் மின்னணு வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    பாஜக

    மத்திய பா.ஜனதா அரசின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் எப்படி பா.ஜனதா வழிகாட்டுதல்படி செயல்படுகிறதோ, அதேபோல் தான் தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளே மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பிவிட்டன. இந்தியாவும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்.

    மக்கள் சந்தேகம் எழுப்பும்போது, பா.ஜனதா மட்டும் மின்னணு வாக்கு எந்திரத்தை விரும்புவது ஏன்?. அனைத்துக்கட்சிகளும் சந்தேகத்தை எழுப்பும்போது, அதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். மராட்டிய தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 24-ந் தேதி (அதாவது நாளை) நடக்கிறது. இதில் மக்களின் முடிவு என்ன என்பது தெரிந்துவிடும். மக்களின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் என்ன முடிவை வழங்குகிறார்களோ? அது எனக்கு தெரியாது.

    கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டை என்னவென்று அழைப்பது?. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு எந்த நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×