search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன பட்டாசு
    X
    சீன பட்டாசு

    சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

    சீன பட்டாசுகளை விற்றாலும், வாங்கினாலும் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்டு வந்த சிவகாசி, சமீப காலமாக நலிவுற்ற நிலையில் உள்ளது. பல்வேறு காரணங்களால் பட்டாசு தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளது. சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிக நச்சுத்தன்மை கொண்டதும், குறைந்த விலையிலானதுமான சீன பட்டாசுகளை சட்ட விரோதமாக இங்கே இறக்குமதி செய்வதும், கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்வதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் சீன பட்டாசுகளின் சட்ட விரோத இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என எல்லாவற்றுக்கும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக சுங்கத்துறை முதன்மை கமிஷனர் நேற்று விடுத்துள்ள அறிவிப்பில், “பட்டாசுகள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சீன பட்டாசுகளை கொண்டு சென்றாலோ, வைத்திருந்தாலோ, மறைத்தாலோ, விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ, எந்த வகையில் கையாண்டாலும் அது சுங்க சட்டம் 1962-ன் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

    சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கடத்திக்கொண்டு வருவதும், இந்திய சந்தைகளில் அவற்றை விற்பனை செய்வதும் கடுமையாக கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சீன பட்டாசுகளை பயன்படுத்துவது என்பது வெடிபொருட்கள் சட்ட விதிகள், 2008-ன் கீழ் கெடுதியானது; ஏனெனில் அவை சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு, லிதியம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ரசாயனங்களை கொண்டுள்ளன; இவையெல்லாம் மிகவும் ஆபத்தானவை, சுற்றுச்சூழலுக்கு எதிரானது. சீன பட்டாசுகளை வாங்குவது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×