search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா?

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் கடந்த புதன்கிழமை அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

    ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குற்றம் சுமத்தப்பட்டவர் தாமாக ஜாமீனில் விடு தலையாக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த அடிப்படையில் ப.சிதம்பரத்தை திகார் ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டுவர காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் கைதாகி நாளையு டன் 60 நாட்கள் நிறைவு பெறுகிறது. இதை கருத்தில் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று டெல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி லால்சிங்கிடம் சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்டதாக அந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது.

    குற்றப்பத்திரிகையில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன தலைவர் பீட்டர் முகர்ஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் 2-வது குற்ற வாளியாக இருக்கிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய ப.சிதம்பரம் 4-வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

    ப.சிதம்பரம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120பி (குற்றச்சதி), 420 (மோசடி), 471 (மோசடியாக தயாரிக்கப்படும் ஆவணங்களை பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் 3 பிரிவிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் மொத்தம் 14 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்திராணி முகர்ஜி பாராளுமன்ற நார்த்பிளாக்கில் சிதம்பரத்தை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். அவர் கார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. கூறி உள்ளது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க வேண்டுமானால் தனது மகன் (கார்த்தி) நிறுவனத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டதாக இந்திராணி முகர்ஜி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ப.சிதம்பரம் கேட்டு கொண்டபடி சிங்கப்பூர், மொரீசியஷ், பெர்முடா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் ரூ.35.5 கோடி லஞ்சமாக கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி கூறி இருக்கும் தகவலும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்திராணி முகர்ஜி


    இந்திராணி கூறியுள்ள இந்த தகவலை உறுதி செய்ய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மொரீசியஸ், பெர்முடா ஆகிய 5 நாடுகளுக்கும் கடிதங்கள் எழுதி இருப்பதாகவும் அந்த நாடுகளில் இருந்து பதிலுக்காக காத்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.

    இவை தவிர லஞ்சப்பணம் கைமாற உதவியதாக ஒருவரை பெயர் குறிப்பிடாமல் குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. சுட்டிக்காட்டி உள்ளது. பெயர் குறிப்பிடாமல் ஒருவரை கூறியிருப்பதின் மூலம் அடுத்த கட்ட விசாரணையின்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் சி.பி.ஐ. சுட்டிக்காட்டி உள்ளது.

    மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் முறைகேடாக ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதால் தனது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளார். மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு அரசு கருவூலத்துக்கு நஷ்டத்தை உருவாக்கி இருக்கிறார் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக பணம் பெறுவதற்காகவே கார்த்தி சிதம்பரம் ஏ.எஸ்.சி.பி.எல். என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்றும் அந்த நிறுவனத்திற்கு ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9.96 லட்சம் பணம் பெறப்பட்டதாகவும் ஆனால் எந்த சேவையும் அந்த நிறுவனம் மூலம் நடைபெறவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் மற்ற 13 பேருக்கும் எத்தகை வகைகளில் தொடர்பு உள் ளது என்றும் குற்றப்பத்திரிகையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மீது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் நீதிபதி அஜய்குமார் குகர் விசாரணை நடத்த உள்ளார்.

    குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பதால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×