search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்தார்பூர் சாலை மற்றும் சீக்கியர்கள் புனித தளம்
    X
    கர்தார்பூர் சாலை மற்றும் சீக்கியர்கள் புனித தளம்

    நுழைவு கட்டணம் தொடர்பான பிரச்சனையால் கர்தார்பூர் பாதை விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை: இந்தியா

    கர்தார்பூருக்கு செல்லும் பக்தர்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்போமென பாகிஸ்தான் என தெரிவித்து வருவதால் ஒப்பந்தம் இன்னும் முழுமையடையவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:     

    பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். 

    அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
     
    சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    இருநாடுகளின் வெளியுறவுத்துறை இணை செயலாளர்கள் மட்டத்தில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் இருந்து கர்தார்பூர் பாதை வழியாக சீக்கிய ஆலயத்துக்கு வரும் யாத்ரீகர்கள் ஆண்டு முழுவதும் விசா இல்லாமல் வருவதற்கு பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.

    இதற்கிடையில், தங்கள் நாட்டிற்கு கர்தார்பூர் சாலை வழியாக வரும் இந்தியாவை சேர்ந்த சீக்கிய பக்தர்கள் நுழைவு கட்டணமாக 20 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1420) செலுத்த வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. 

    இதனால் இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

    ரவீஷ் குமார்

    அப்போது அவர் கூறுகையில், 'கர்தார்பூர் சாலை தொடர்பாக பாகிஸ்தான் உடன் அனைத்துவிதமான பிரச்சனைக்களுக்கும் முடிவு எட்டப்பட்டுவிட்டது. ஆனால், நுழைவு கட்டணத்தில் மட்டும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

    கர்தார்பூருக்கு சாலை வழியாக வரும் யாத்ரீகர்களுக்கு தலா 20 டாலர்கள் வீதம் (இந்திய மதிப்பில் ரூ.1420) நுழைவு கட்டணமாக விதிக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

    பாகிஸ்தானுக்கு புனித பயணம் வரும் யாத்ரீகர்களின் நலன் கருதி அவர்கள்மீது எந்த வித நுழைவு கட்டணமும் விதிக்க வேண்டாம் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. 

    ஆகையால் தற்போதுவரை நுழைவு கட்டணம் தொடர்பான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், இந்த பிரச்சனை விரைவில் சுமூகமான முறையில் முடிவுக்கு வந்து, இருநாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×