search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பங்கஜாக்சி
    X
    பங்கஜாக்சி

    4-வது முயற்சியில் வெற்றி- எஸ்எஸ்எல்சி தேர்வில் சாதித்த 78 வயது மூதாட்டி

    கேரளாவில் பேரக்குழந்தைகள் ஊக்கமளித்ததால் 4-வது முயற்சியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 78 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் 100 சதவீத படிப்பறிவு உள்ள மாநிலமாக கேரளா திகழ்கிறது.

    கேரளாவில் முதியோர் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக பஞ்சாயத்து வாரியாக பள்ளிகள் நடத்தப்படுகிறது. இதில் முதியோர்கள் சேர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.

    தொடக்க நிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புக்கான தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இப்பள்ளிகளில் ஏராளமான முதியோர் சேர்ந்து கல்வி கற்பதோடு, தேர்வுகளையும் எழுதி வருகிறார்கள்.

    கண்ணூர் மாவட்டம் பினராய் பஞ்சாயத்துக்குட்பட்ட பரப்பிராம் பகுதியைச் சேர்ந்த பங்கஜாக்சி என்ற 78 வயது மூதாட்டியும் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    தொடக்க மற்றும் இடைநிலை தேர்வுகளில் வெற்றி பெற்ற பங்கஜாக்சி அடுத்து உயர்நிலை தேர்வான எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதிய பங்கஜாக்சி முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர், மனம் தளராமல் அடுத்தடுத்து முயற்சி செய்தார்.

    3 முறை முயற்சி செய்தும் பங்கஜாக்சியால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து தோல்வியே கிடைத்ததால் அடுத்து தேர்வு எழுத பங்கஜாக்சி தயக்கம் காட்டினார்.

    தேர்வு எழுத தயங்கிய பங்கஜாக்சிக்கு அவரது பேரக்குழந்தைகள் ஊக்கமளித்தனர். அந்த குழந்தைகள் கூறும்போது, நாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் எங்கள் பெற்றோர் பரிசுகள் தருவர். அதுபோல நீங்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றால் உங்களை ஊட்டி, மைசூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வோம் என்று ஆசை காட்டினர்.

    பேரக்குழந்தைகளின் வேண்டுகோளை ஏற்று பங்கஜாக்சி 4-வது முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார்.

    இதனை பங்கஜாக்சியின் பேரக்குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் பாட்டிக்கு வாக்களித்தப்படி மைசூர் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ந்தனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 4-வது முறையாக எழுதி வெற்றி பெற்ற பங்கஜாக்சி பினராய் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவரது ஒரு மகள் அப்பகுதி கம்யூனிஸ்டு கட்சியின் கண்ணூர் மண்டல செயலாளராக உள்ளார். பங்கஜாக்சி கண்ணூர் மண்டல கம்யூனிஸ்டு கட்சியின் மகிளா கமிட்டி தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

    Next Story
    ×