search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஜோ தாமஸ் - ஜோளி (உள்படம்)
    X
    ரோஜோ தாமஸ் - ஜோளி (உள்படம்)

    வழக்கை வாபஸ் பெறக்கோரி ஜோளி என்னை மிரட்டினார் - கொல்லப்பட்டவரின் சகோதரர் பேட்டி

    வழக்கை வாபஸ் பெறக்கோரி ஜோளி என்னை மிரட்டினார் என்றும், போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாகவும் ராய்தாமசின் சகோதரர் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயியைச்சேர்ந்தவர் ராய்தாமஸ். ராய்தாமஸ் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என 6 பேர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

    இவர்களின் சாவில் ராய்தாமசின் மனைவி ஜோளிக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராய்தாமசின் சகோதரர் ரோஜோ தாமஸ் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஜோளியை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் 6 பேரையும் சயனைடு கொடுத்து கொன்றதாக ஜோளி வாக்குமூலம் அளித்தார்.

    கணவரின் சொத்து மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக 6 கொலைகளை செய்ததாக ஜோளி கொடுத்த வாக்குமூலம் கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    6 கொலைகளையும் நிகழ்த்தியது எப்படி? என்பது பற்றி விசாரிக்க போலீசார் ஜோளியை காவலில் எடுத்தனர். கொலை நடந்த வீட்டிற்கு அழைத்துச்சென்று சாட்சியங்கள் சேகரித்தனர்.

    ஜோளியின் வீட்டில் அவர் கொலைக்கு பயன்படுத்திய சயனைடு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மேலும் ஜோளி வீட்டின் அருகில் வசித்து வந்தவர்கள், அவருக்கு தெரிந்தவர்கள், உறவினர்களிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கி வருகிறார்கள்.

    ஜோளி கைதாக காரணமாக இருந்த ஜோளியின் கணவர் ராய்தாமசின் சகோதரர் ரோஜோ தாமசிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். 9 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

    விசாரணை முடிந்து வெளியே வந்த ரோஜோ தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், அமெரிக்காவில் வசித்து வருகிறேன். இங்குள்ள குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக இறந்தது பற்றி அறிந்தேன். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஊருக்கு வந்தேன்.

    இங்கு வந்த பின்பு ஜோளி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். இது ஜோளிக்கு தெரிந்து விட்டது. அவர் என்னை சந்தித்து புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டினார். அவர் என்னை மிரட்டியதால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது.

    இப்போது அது நிரூபணம் ஆகி உள்ளது. போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×