search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    மோடி அரசு இருக்கும் வரை நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீராது: ராகுல்காந்தி

    மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும் வரை வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்க்கப்படாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    மும்பை :

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் யவத்மாலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்ற தவறான பொருளாதார கொள்கைகள் தான் வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததற்கு காரணம்.

    மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும் வரை வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்க்கப்படாது. அடுத்த 6 மாதங்களில் வேலையில்லா இளைஞர்கள் இரண்டு மடங்காக அதிகரித்து விடுவார்கள்.

    பிரதமர் மோடி

    மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியற்றால் ஏழை மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அம்பானி, அதானியால் பொருளாதாரம் இயங்கவில்லை. ஏழை மக்களால் தான் இயங்குகிறது.மராட்டிய மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு தேர்வு செய்யுங்கள்.

    அந்த அரசாங்கம் ஏழை, விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த செயல்படும்.அண்மையில் குஜராத் சென்றிருந்த போது, சில சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் தங்களது தொழில் முடங்கி விட்டதாக என்னிடம் வேதனை தெரிவித்தனர்.

    ஜி.எஸ்.டி. செலுத்தி விட்டு தொழில் செய்பவர்கள் அதிகாரிகளுக்கு ஆண்டு முழுவதும் லஞ்சமும் கொடுக்க வேண்டி உள்ளது. இந்த நிலை நாட்டின் மற்ற இடங்களிலும் நிலவுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×