search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    இறுதி கட்ட விசாரணை தொடங்கியது - அயோத்தியில் 144 தடை உத்தரவு

    அயோத்தி வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் அயோத்தியில் 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார் பிறப்பித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

    இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இது தொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.

    ஆனால் அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக இந்த விசாரணை நடந்தது. ஆனால் சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மாதம் 17-ந்தேதிக்குள் விசாரணை அனைத்தையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதிக்குள் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதால் அதற்குள் தீர்ப்பு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் தசரா பண்டிகை காரணமாக கடந்த ஒரு வாரமாக வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. வருகிற வியாழக்கிழமை விசாரணை நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாபர் மசூதி

    இதனால் நாடு முழுவதும் அயோத்தி வழக்கு விசாரணையும் தீர்ப்பும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அயோத்தியில் 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார் பிறப்பித்துள்ளனர். 4 பேருக்கு மேல் அயோத்தில் கூடக்கூடாது என்று அந்த தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அயோத்தியில் டிசம்பர் 10-ந்தேதி வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு நெருங்குவதை தொடர்ந்து இப்போதே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அயோத்தியில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பீதி உருவாகி இருப்பதாக உத்தரபிரதேச மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    Next Story
    ×