search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2000 ரூபாய் நோட்டுகள்
    X
    2000 ரூபாய் நோட்டுகள்

    2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்

    கள்ளநோட்டுகளை தடுக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

    பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி கிடைப்பதை தடுக்கவும், கருப்புப்பணம் பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு பதில் புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் புதிய வடிவங்களில், புதிய வண்ணங்களில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரிசர்வ் வங்கி அதை மறுத்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.

    ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த சில மாதங்களாக புழக்கம் இல்லாமல் குறைந்து போனது. ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதும் குறைந்தது. சமீபகாலமாக பல இடங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி

    இதுபற்றி உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக அந்த பதிவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கூறியுள்ள பதிவில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 2016-17ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது 3,542.991 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2017-2018ம் ஆண்டு 111.507 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன.

    2018-2019ம் ஆண்டு 46.690 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. ஆனால் 2019-20ம் நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படவில்லை.

    இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பொருளாதார நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அதிகாரிகளும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மத்திய அரசின் உயர்அதிகாரிகள் கூறுகையில், “கடத்தல், போதைப்பொருட்கள் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மிக மிக எளிதாக பயன்படுத்த முடியும். எனவே உயர்மதிப்பு நோட்டுகள் அச்சிடுவது நிறுத்துவது நல்லதுதான்” என்று கூறியுள்ளனர்.

    பிரபல பொருளாதார நிபுணர் நிதின்தேசாய் கூறியதாவது:-

    கருப்புப்பணம் பரிமாற்றத்துக்கு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அவற்றை திடீரென நீக்கம் செய்வது முரண்பாடாகி விடும். எனவே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பதற்கு பதில், அதை அச்சிடுவதை படிப்படியாக குறைக்கலாம்.

    இதனால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பயன்படும் புழக்கம் சற்று குறையும். அதன் காரணமாக எந்த பிரச்சினையும் ஏற்படபோவதில்லை.

    பல ஐரோப்பிய நாடுகள் இத்தகைய நடைமுறையை கடைபிடித்து வெற்றி பெற்றுள்ளன. அதிக அளவு விவசாயம், முறைசாரா தொழில் வைத்துள்ள நமது நாட்டுக்கும் இந்த முறை பயன்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொருளாதார நிபுணர் ஷேர்சிங் கூறுகையில், “டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டுமானால் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். எனவே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்துவது பிரச்சினை இல்லை. மேலும் கருப்பு பணம் அதிக அளவில் பதுக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கலாம்” என்றார்.

    2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டில் 3,363 மில்லியன் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை புழக்கத்தில் இருந்தது. இது இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை மதிப்பில் 3.3 சதவீதமாகும்.

    தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை புழக்கம் 3,291 மில்லியனாக குறைந்துள்ளது. மொத்த ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கையில் 3 சதவீதமாக குறைந்துள்ளது.

    Next Story
    ×