search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்தவராக கருதியவர் உயிர் பிழைத்த அதிசயம்
    X
    இறந்தவராக கருதியவர் உயிர் பிழைத்த அதிசயம்

    ஒடிசாவில் இறந்ததாக கருதியவர் உயிர் பிழைத்த அதிசயம்

    ஒடிசாவில் இறந்து விட்டார் எனக் கருதி உறவினர்கள் இறுதிச் சடங்கிற்கு உடலை தூக்கிச் சென்றபோது உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
    ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமம் கபகல்லா. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிமானச் மாலிக். 55 வயதாகும் இவர் நேற்று வீட்டின் அருகில் உள்ள காட்டில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். ஆனால் மாலைப் பொழுது ஆடு, மாடுகள் வழக்கம்போல் வீடு திரும்பிய நிலையில், மாலிக் மட்டும் திரும்பவில்லை.

    உறவினர்கள் அவரை தேடினார்கள். இன்று காலை அவர் காட்டுப்பகுதியில் விழுந்து கிடந்ததை சிலர் கண்டனர். அவரை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இறந்து விட்டதாக கருதிய உறவினர்கள், உடல் தகனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

    உடலை தகனம் செய்யும் இடத்திற்கு அவரை தூக்கிச் சென்றனர். அப்போது திடீரென மாலிக் தனது தலையை அங்கும் இங்கும் அசைத்துள்ளார். இதை பார்த்த சிலர் பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். சிலர் அவரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததும், ஆரோக்கியத்துடன் எழுந்து உட்கார்ந்துள்ளார். சிகிச்சைக்கு பின் அபாய கட்டத்தை தாண்டி பிழைத்துள்ளார்.

    ‘‘கடுமையான காய்ச்சல் காரணமாக உடல் சோர்ந்து மயங்கி விழுந்துள்ளார். சரியான சிகிச்சை அளித்த பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. சிகிச்சை பெற்ற பின்னர், அவர் டிஸ்சார்ஜ் ஆனார்’’ என்று சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.

    மாலிக் இறந்து விட்டார் என்று கூறியதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது வருத்தும் அளிக்கிறது என்று கூறிய அவரது மனைவி, ‘‘எனது கணவர் உயிரோடு திரும்பியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

    மரணமடைந்த விவசாயி, உடல் தகனம் செய்யும் இடம் வரை சென்று உயிர் பிழைத்தது அந்த கிராமத்தில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×