search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஜாலி
    X
    கைதான ஜாலி

    இதழ்களில் புன்னகை, நாக்கில் பொய்கள், பார்வையில் சயனைட்: கேரளாவை உலுக்கிய பெண்

    கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கணவர், மாமியார், மாமனார், இரண்டாம் கணவரின் மனைவி, குழந்தை என 6 பேரின் கொலைகளுக்கு பின்னணியில் இருந்த பெண்ணைப்பற்றி பார்க்கலாம்.
    திருவனந்தபுரம்:

    ’கடவுளின் சொந்த நாடு’ கேரளாவை பற்றி அங்கிருப்பவர்கள் மிகவும் பெருமிதமாக கூறும் வாசகம் இது.

    ஆனால், இந்த கடவுளின் நாட்டில் மிகப்பெரிய பக்திமானாக வேடமிட்டு, புன்முறுவல் பூத்த முகத்துடன், நெஞ்சம் நிறைய வஞ்சத்துடன், வாய்நிறைய பொய்-புளுகுடன் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தில் வளையவந்த ஜாலி தாமஸ்(47) என்ற பெண்ணை 6 கொலை வழக்குகள் தொடர்பாக போலீசார் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

    கேரளா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராய் தாமஸ். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முன்னதாக, ராய் தாமசின் தாயார் அன்னம்மா 2002-ம் ஆண்டிலும் தந்தையார் டாம் தாமஸ் 2008-ம் ஆண்டிலும் மரணம் அடைந்தனர்.

    தங்களது குடும்பத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நிகழ்ந்த இந்த மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்ட ராய் தாமசின் தாய்மாமா மேத்யூ என்பவரும் கடந்த 2014-ம் ஆண்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்நிலையில், ராய் தாமஸ் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தீவிரமான விசாரணையில் இறங்கிய கேரள மாநில குற்றவியல் துறை போலீசார் ராய் தாமஸ் மனைவி ஜாலி(47) என்பவரை கடந்த சனிக்கிழமை அதிரடியாக கைது செய்தனர்.

    ஜாலியால் கொல்லப்பட்டவர்கள்

    ராய் தாமஸ் மரணத்துக்கு பின்னர் ஷாஜு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வாழும் ஜாலி கடந்த 2016-ம் ஆண்டில் ஷாஜுவின் முதல் மனைவி சிலி மற்றும் ஒன்றரை வயது மகள் ஆகியோரின் திடீர் மரணத்துக்கும் காரணமாக இருந்த உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

    உணவில் ‘சயனைட்’ என்னும் கொடிய விஷத்தை கலந்து இந்த ஆறு பேரையும் தீர்த்துக்கட்டிய தொடர் கொலையாளி ஜாலியின் அடுத்தக்குறி.., வெளிநாட்டில் வாழும் ராய் தாமசின் சகோதரர் ரோஜோ. ஆனால், அவர் தொலைதூரத்தில் வாழ்ந்ததால் ஜாலியின் 'சயனைட் பார்வை’ மூலம் அவரை தீர்த்துக்கட்ட முடியாமல் போனது.

    மேற்படி 6 கொலைகளில் ஜாலிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மேத்யூ மற்றும் கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சயனைட் எனப்படும் தங்க நகைகளை உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் கொடியவகை திராவகத்தை ஜாலிக்கு அளித்த நகை கடை பணியாளர் பிராஜிகுமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில் இதுவரை கிடைத்த தகவலின்படி, கணவர் ராய் தாமசின் மைத்துனரான ஷாஜு மீது ஜாலி காதல்வசப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், ராய் தாமஸ் குடும்பத்துக்கு இருக்கும் ஏராளமான சொத்துக்களை பிரிந்துச் செல்ல ஜாலிக்கு மனம் வரவில்லை.

    இதனால், ஆரம்பத்தில் கணவர் ராய் தாமசின் தாயார் அன்னம்மா தொடங்கி அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ வரை உணவில் சயனைட் கலந்து கொடுத்து, அடுக்கடுக்காக 4 கொலைகளை சத்தமில்லாமல் கச்சிதமாக செய்து முடித்த ஜாலி, தனக்கு இரண்டாவது கணவனாக வரப்போகும் ‘ரகசிய காதலன்’ ஷாஜுவுக்கும் வேறெந்த பந்தங்களும் இருக்க கூடாது என்று தீர்மானித்து தனக்கே உரிய ‘பார்முலாவை’ பயன்படுத்தி ஷாஜுவின் முதல் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகளையும் கொன்றுள்ளார்.

    இரண்டாவது கணவர் ஷாஜுவுடன் ஜாலி

    இத்தனை கொலைகளை செய்த பின்னரும் எந்த விதமான பதற்றமும் இல்லாமல் எப்போதுமே சிரித்த முகத்துடன் இரண்டாவது கணவர் ஷாஜுவுடன் இல்லற வாழ்க்கையை நடத்திவந்த ஜாலியை அவர் வசிக்கும் கூடத்தாயி கிராமத்து மக்கள் மிகவும் பக்தி, ஆச்சாரமான பெண் என்று வர்ணிக்கின்றனர்.

    கத்தோலிக்க கிறிஸ்தவப் பெண்ணான ஜாலி, தேவாலயங்களில் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் எப்போதும் அதில் தவறியதில்லை என அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

    மற்ற இடங்களில் அடிக்கடி நடக்கும் சிறப்பு உபவாச ஜெபக்கூட்டங்களிலும் தவறாமல் கலந்துக்கொள்ளும் ஜாலி (4 கொலைகள் நடந்த) தனது வீட்டிலும் சில வேளைகளில் ஜெபக்கூட்டங்களை நடத்தியுள்ளார். அதில் நாங்கள் எல்லாம் கலந்துக் கொண்டிருக்கிறோம்.

    இத்தனை கொலைகளையும் செய்துவிட்டு எந்த பதற்றமும் இல்லாமல் ஒரு நல்ல குடும்பத்தலைவியைப்போல் வெகு இயல்பாக அவளால் எப்படி இருக்க முடிந்தது? என்று எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என சிலர் தெரிவித்தனர்.

    இப்படி பக்திமானாக வலம்வந்து ’நல்ல பெண்மணி’ என ஊராரை நம்பவைத்த ஜாலி, கோழிக்கோட்டில் உள்ள என்.ஐ.டி.யில் (தேசிய தொழில்நுட்ப கழகம்)விரிவுரையாளராக பணியாற்றுவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்துள்ளார்.

    காலையில் எழுந்து வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, சிரித்த முகம் மாறாமல் மிடுக்காக அவர் (இல்லாத) வேலைக்காக வெளியே சென்று கஷ்டப்படுவதை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.

    ஆனால், எப்படியோ.. கோழிக்கோட்டில் உள்ள என்.ஐ.டி. வளாகத்துக்குள் சுதந்திரமாகவும் ஜாலியாகவும் வலம்வந்த ஜாலி அங்குள்ள நூலகம் முதல் உணவகம் வரை தங்குதடையின்றி நுழையும் அளவுக்கு பிரசித்தியானவராக திகழ்ந்தார்.

    பின்நாட்களில், பியூட்டி பார்லரில் பணியாற்றுவதாகவும் உள்ளூர்வாசிகளை ஏமாற்றி நாடகமாடியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

    ஜாலி செய்த தொடர்கொலைகள் பற்றி விசாரித்துவரும் போலீசார், இது மிகவும் சிக்கலான வழக்காக மாறும் என கருதுகின்றனர். 

    ஜாலியும் அவரது கூட்டாளிகளும் செய்துள்ள இந்த கொலைகள் உள்குடும்பத்துடன் நின்று விடும் என்று நான் கருதவில்லை. இவர்கள் வெளியிலும் பல கைவரிசைகளை காட்டி இருக்கலாம். கைதான ஜாலியின் இளமைக்கால வாழ்க்கை பற்றிய தகவல்களை நாங்கள் திரட்டி வருகிறோம். 

    மரணம் என்ற பெயரில் அடையாளமே தெரியாமல் அழுந்திப்போன 6 கொலைகளை துப்பு துலக்கிய கேரள மாநில போலீசார் மிகப்பெரிய காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ளலாம் என கேரள மாநில காவல்துறை டி.ஜி.பி. லோக்நாத் பெஹேரா குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், 'எனது தாயார் இந்த கொலைகளை செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை என்கிறார் ராய் தாமஸ்-ஜாலி தம்பதியரின் மகனான ரோமோ ராய்(21). எனினும், அவர்தான் இந்த கொலைகளை செய்தார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால் சட்டம் தனது கடமையை செய்வதில் எனக்கு மாற்று கருத்து இல்லை என்றும் ரோமோ கூறினார்.



    Next Story
    ×