search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ தலைவர் சிவன்
    X
    இஸ்ரோ தலைவர் சிவன்

    விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிடவில்லை- சிவன்

    விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகளை விட்டு விடவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
    பெங்களூரு:

    நிலவின் தென்துருவத்தில் கடந்த 7-ந்தேதி அதிகாலையில் தரை இறங்கி விடும் என சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஆனால் விக்ரம் லேண்டர், தரை இறங்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு அறுந்து போனது.

    விக்ரம் லேண்டர் மெல்ல, மெல்ல தரை இறங்க முடியாமல் அதிவேகமாக வந்து விழுந்து விட்டது தெரிய வந்தது.

    விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் 14 நாட்கள்தான். எனவே விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா ஆகியவை முயற்சித்தன. அந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கவில்லை.

    ஆனால் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அது விழுந்து கிடந்த இடத்தின் மேலே நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் சென்றது. அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள், அந்த இடத்தை படம் பிடித்து அனுப்பின. அதில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை. அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்திருந்ததே, விக்ரம் லேண்டர் தெரியாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

    மேலும், அந்த இடத்தில் வெளிச்சம் வரும்போது, வரும் 14-ந்தேதி நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் மீண்டும் அந்த இடத்தை கடந்து செல்லும், அப்போது அதன் கேமராக்கள் புதிய படங்களை எடுத்து அனுப்பும், அப்போது விக்ரம் லேண்டர் பற்றிய தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விக்ரம் லேண்டர்

    விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை இஸ்ரோ விட்டுவிடவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை. நிலவில் இப்போது இரவுப்பொழுதாகும். அங்கு இரவுப்பொழுது முடிந்த பின்னர் நாங்கள் மீண்டும் தொடங்குவோம்.

    பல நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமான ஒன்று என்று கருதுகிறேன். ஆனால் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

    இரவு நேரங்களில் நிலவில் நிலவுகிற கடும் குளிர்நிலையை விக்ரம் லேண்டரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்கிறீர்கள். குளிர் மட்டுமல்ல, விழுந்த அதிர்ச்சியும் கவலைப்பட வேண்டியதாகத்தான் இருக்கிறது. அதிவேகத்தில் வந்துதான் லேண்டர் விழுந்திருக்கிறது. விழுந்த அதிர்வால் அதனுள் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

    மேலும், தகவல் தொடர்பு ஆன்டெனா எங்கு நோக்கி இருக்கிறது என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவது என்பது மிகக்கடினமானதுதான்.

    அதே நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் (சுற்றுகலன்) நல்ல நிலையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×