search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    இந்தியாவின் சரியான வரலாறை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது - அமித் ஷா

    தவறிழைத்த ஆட்சியாளர்களிடம் வரலாறை பதிவு செய்யும் பொறுப்பும் இருந்ததால் உண்மைகள் மறைக்கப்பட்டன. சரியான வரலாறை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்,
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீரில் அடக்குமுறைகள் நடப்பது போலவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தடைகள் எங்கேயும் இல்லை, உங்கள் புத்தியில்தான் இருக்கிறது.

    காஷ்மீரில் உள்ள 196 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. வெறும் 8 காவல் நிலையங்களில் மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பலப்படும். பிரதமர் மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் இன்னும் 5-7 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றமடைந்த பகுதியாக காஷ்மீர் மாறிவிடும்.

    ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வன்முறை மோதல்களில் 41,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நமது ராணுவ வீரர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், விதவைகளான அவர்களின் மனைவியர்கள், அனாதைகள் ஆகிப்போன அவர்களது குழந்தைகள் தொடர்பாக யாருமே
    கவலைப்படவில்லை.

    அமித் ஷா

    ஆனால், சில நாட்கள் கைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டால் மனித உரிமைகள் மீறப்படுவதாக சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள். கைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவது எப்படி மனித உரிமை மீறலாகும்?
    கடந்த 2 மாதங்களில் 10 ஆயிரம் வீட்டு தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் பொது தொலைபேசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    370-வது சட்டப்பிரிவு தொடர்பாக இன்றும் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. 1947-ம் ஆண்டில் இருந்தே சர்ச்சைக்குரிய, விவாதத்துக்குரிய பொருளாக காஷ்மீர் பிரச்சனை இருந்து வருவது நமக்கு தெரியும். ஆனால், காஷ்மீர் தொடர்பாக சிதைக்கப்பட்ட வரலாறுதான் மக்களிடம் முன்வைக்கப்பட்டது.

    முன்னர் தவறிழைத்த ஆட்சியாளர்களின் கையில் வரலாறை பதிவு செய்யும் பொறுப்பும் இருந்ததால் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன. சரியான வரலாறை எழுதி மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

    அமெரிக்காவில் 7 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஒரு தலைவர் கூட பிரச்சனை எழுப்பவில்லை. இது பிரதமர் மோடியின் ராஜதந்திர அணுகுமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×