search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றை படத்தில் காணலாம்.
    X
    கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றை படத்தில் காணலாம்.

    கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    கேரள மாநிலம், கொச்சியில் விதிமீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை 138 நாளில் இடித்து தள்ளவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தரவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் கொச்சியில் மரடு என்ற இடத்தில் கடலோர கட்டுப்பாட்டு மண்டல விதிகளை மீறி 357 வீடுகளைக் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 4 அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்களும் கடலோர கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் அமைந்துள்ளன என்பதை கண்டறிந்த 3 உறுப்பினர் குழு அறிக்கையை ஏற்றது.

    அதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு வளாகங்களை ஒரு மாத காலத்துக்குள் இடித்து தள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது.

    ஆனால் அந்த தீர்ப்பை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

    அதைத் தொடர்ந்து, குடியிருப்புவாசிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் 4 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலும் உள்ள வீடுகளின் மின் வினியோகத்தையும், குடிநீர் வினியோகத்தையும் கேரள மாநில அரசு துண்டித்தது.

    இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஷ்ரா, ரவீந்திர பட் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கேரள மாநில அரசின் சார்பில், அதன் தலைமைச்செயலாளர் டாம் ஜோஸ் ஆஜரானார். மேலும், கேரள மாநில அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே ஆஜராகி, 4 குடியிருப்பு வளாகங்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் வினியோகத்தை துண்டித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவலை தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    * 4 அடுக்கு மாடி குடியிருப்பு வளாகங்களில் உள்ள 357 வீடுகளை 138 நாட்களில் இடித்து தள்ள வேண்டும்.

    * வீடுகளின் உரிமையாளர்களுக்கு 4 வாரங்களுக்குள் தலா ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

    * இழப்பீட்டு தொகையை கட்டுமான நிறுவன அதிபர்களிடம் இருந்து கேரள அரசு வசூலித்துக்கொள்ளலாம்.

    * வீடுகள் இடிக்கப்படுவதை பார்வையிட ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×