search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி பிரம்மோற்சவ விழா கருடசேவை
    X
    திருப்பதி பிரம்மோற்சவ விழா கருடசேவை

    திருப்பதி பிரம்மோற்சவ விழா கருடசேவை அகண்ட திரையில் ஒளிபரப்பு

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவின்போது கருடசேவை அகண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30-ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. 4-ந் தேதி கருட சேவை நடக்கிறது.

    அதில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கருடசேவை அன்று வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள், போலீஸ் துறையினர் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வரும்போது, அவர்கள் கேலரிகளில் அமர்ந்து வாகன சேவையைப் பார்ப்பதற்காக, ராம்பகீதா தங்கும் விடுதி அருகில் இருந்து கோவில் அருகில் உள்ள வாகன மண்டபம் அருகில் வரை உள்ள கேலரியில் அமர வைக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு கருடசேவையின்போது பணிகளை போல், இந்த ஆண்டும் முன்னேற்பாடு பணிகளை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு வி‌ஷயத்திலும் கடந்த ஆண்டு எப்படி செய்யப்பட்டதோ, அதேபோல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

    கருட வாகனம் வரும்போது, கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பிக்க வரிசையில் அனுப்பப்படுவார்கள். அப்போது தள்ளுமுள்ளு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கருட சேவையைப் பார்ப்பதற்காக திருமலையில் பல்வேறு இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் வைக்கப்படுகிறது. அதில் ஒளி பரப்பப்படும் கருடசேவை காட்சிகளை பக்தர்கள் நேரில் கண்டுகளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×