search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசாராம் பாபு
    X
    ஆசாராம் பாபு

    சிறுமி கற்பழிப்பு - ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரிய ஆசாராம் பாபுவின் மனு தள்ளுபடி

    சிறுமி கற்பழிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆசாராம் பாபு சார்பில் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு(76). ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்துவந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டன.

    ஆன்மிக நிகழ்ச்சியில் ஆசாராம் பாபு (கோப்பு படம்)

    பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் ஜோத்பூர் நகரில் உள்ள ஐகோர்ட்டில் நான்காண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் அரசுதரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் முடிந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளித்த நீதிபதி மதுசூதன் சர்மா ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யக்கோரி அவரது வழக்கறிஞர்கள் ஷிரிஷ் குப்தே மற்றும் பிரதீப் சவுதரி ஆகியோர் ஜோத்பூர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    ’ஆசாராம் பாபுவின் மீது குற்றம்சாட்டிய பெண் 18 வயதை கடந்தவர். அதனால், சிறார் வன்கொடுமை சட்டமான ’போக்சோ’ சட்டத்தின்கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சரியல்ல’ என இந்த மனு தொடர்பான வாதத்தின்போது ஆசாராமின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

    ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சந்தீப் மேத்தா,  வினீத் குமார் மாத்தூர் ஆகியோர், குற்றம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்ததாக ஆரம்பத்தில் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி, ஆசாராம் பாபு சார்பில் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்தனர்.

    Next Story
    ×