search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா, எடியூரப்பா
    X
    அமித்ஷா, எடியூரப்பா

    கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அமித்ஷாவுடன் எடியூரப்பா ஆலோசனை

    கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் டெல்லி சென்ற எடியூரப்பா அங்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம் உள்பட 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே முதல்-மந்திரி எடியூரப்பாவை தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், “உங்களை நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம், எங்கள் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால் எங்களின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. கொடுத்த வாக்குறுதிபடி எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் தேதி இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்று பா.ஜனதா உள்பட எந்த கட்சியும் எதிர்பார்க்கவில்லை. இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கும் சற்று அதிர்ச்சியை தந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் முதல்-மந்திரி எடியூரப்பா அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை மந்திரியும், பா.ஜனதா தேசிய தலைவருமான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் குறித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

    தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் நிலை குறித்தும், அவர்களின் அரசியல் எதிர்காலம், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வசதியாக சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் எடியூரப்பா விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ‘உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. அதனால் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி உதவியை விரைவாக வழங்குமாறு வலியுறுத்தினேன்.

    அவசர உதவியாக ரூ.2,000 கோடி ஒதுக்குமாறு கேட்டுள்ளேன். நிதி பற்றாக்குறை இருந்தபோதிலும், நாங்கள் இதுவரை ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு மீதான சுமை குறையும். வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வந்ததும், இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது குறித்து இன்னும் 2, 3 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று அமித்ஷா உறுதியளித்துள்ளார். பிரதமர் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும் முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன். நிவாரண பணிகளை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடை இல்லை.

    இதை தவிர வேறு விஷயங்கள் குறித்து நான் விவாதிக்கவில்லை. 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விஷயத்தில் சபாநாயகர், இயற்கை நீதியின் கோட்பாடுகளை பின்பற்றவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாளை (இன்று) என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவித்துள்ளது. அதனால் சில விஷயங்களில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    இந்த சந்திப்பின்போது துணை முதல்-மந்திரிகள் லட்சுமண் சவதி, கோவிந்த் கார்ஜோள், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் உடன் இருந்தனர்.

    டெல்லியில் தங்கியுள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்ட சிலரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். எடியூரப்பா-அமித்ஷா சந்திப்பு குறித்தும், உங்களுக்கு ஆதரவாக பா.ஜனதா இருப்பதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட உதவி உள்பட அனைத்து உதவிகளையும் வழங்க அமித்ஷா ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×