search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    நாடு முழுவதும் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு

    நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. நாசிக்கில் உள்ள வெங்காய சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு ஒரே நாளில் ரூ.1000 விலை உயர்ந்தது.
    புதுடெல்லி:

    நாட்டின் முக்கிய உணவு பொருளாக இருப்பது வெங்காயம். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.20-லிருந்து 25 ஆக விற்கப்படும். வெங்காயம் திடீரென உச்சத்திற்கு சென்று மக்களை அச்சுறுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இப்போது திடீரென வெங்காய விலை கிடுகிடுவென நாடு முழுவதும் உயர்ந்து வருகிறது.

    இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாசிக்கில் உள்ள லசல்கான் என்ற இடத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கு கடந்த 2 வாரமாக விலை ஏற்றமாகவே இருந்தது. நேற்று ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ஒரே நாளில் ரூ.1000 விலை உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி ரூ.4500-க்கு விற்கப்பட்டது.

    வெங்காயம்

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு குவிண்டால் ரூ.5700 வரை விற்றது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் குவிண்டால் ரூ.4300-ஆக இருந்தது. அதை இன்றைய விலை உயர்வு முறியடித்துள்ளது.

    நாசிக் சந்தையில் விற்கப்படும் வெங்காயம் நாடு முழுவதற்கும் கொண்டு செல்லப்பட்டு சில்லரை வர்த்தகமாக விற்கப்படுகிறது. எனவே அடுத்த ஒன்றிரண்டு நாளில் சில்லரை கடைகளில் இன்னும் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று வியாபாரிகள் கூறினார்கள்.

    விலை உயர்வுக்கு வடமாநிலங்களில் பெய்த கடும் மழை தான் காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. அறுவடை செய்த வெங்காயத்தையும் உரிய முறையில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வருவது குறைந்துவிட்டது.

    மேலும் தற்போதைய பருவகால வெங்காய விவசாயமும் முடியும் நிலையில் உள்ளது. அடுத்ததாக ‘காரிப்’ பருவம் வெங்காயம் உற்பத்தி ஆகி வர வேண்டும். அவை அறுவடை செய்து வருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இன்னும் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறினார்கள்.

    நாசிக் மார்க்கெட்டுக்கு கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் குவிண்டால் வெங்காயம் வந்தது. தற்போது 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் குவிண்டால் தான் வருகிறது.

    ஆனால் நேற்று மிகவும் குறைந்து 7 ஆயிரம் குவிண்டால் தான் வந்தது. இன்னும் 10-லிருந்து 20 நாட்கள் வரை வெங்காய வரத்து குறைவாகவே இருக்கும். அதன்பிறகு தென் மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் அறுவடைக்கு வந்துவிடும்.

    அவை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்ததற்கு பிறகு விலைவாசி குறைய வாய்ப்பு இருப்பதாக முக்கிய வியாபாரியான மனோஜ் ஜெயின் தெரிவித்தார். நாசிக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் வேகமாக தீர்ந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் முழுமையாக முடிந்து விடும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×