search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பி.எப். அலுவலகம்
    X
    டெல்லி பி.எப். அலுவலகம்

    சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பி.எப். வட்டி 8.65 சதவீதமாக உயர்வு

    பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள்.
    புதுடெல்லி:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎப்) வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) தீர்மானிக்கிறது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதிக்கு இந்த நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறங்காவலர் வாரியம் ஆலோசனை நடத்தியது.

    மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிஎப் கணக்குதாரர்களின் ஆண்டு வட்டியை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ஆனால் வட்டியை குறைப்பதற்கு நிதியமைச்சகம் விரும்பியது. இந்த விஷயத்தில் நிதியமைச்சகத்திற்கும், மத்திய அறங்காவலர் வாரியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்ததால், வட்டி உயர்வை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதன்பின்னர் சமீபத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார், நிதி மந்திரியை சந்தித்து, வட்டி உயர்வை அமல்படுத்தினாலும் போதுமான உபரி நிதி இருக்கும் என விளக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார், 2018-19 நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். பிஎப் கணக்குதாரர்கள் தங்கள் வைப்பு  நிதிக்கு 8.65 சதவீத வட்டி பெறுவார்கள் என்றும், இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
    Next Story
    ×