search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ வைப்பு (மாதிரி படம்)
    X
    தீ வைப்பு (மாதிரி படம்)

    உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

    உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் வாலிபர் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்திருப்பதுடன், மாநில பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பாதேசா பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்ற மோனு (வயது 20). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மோனு அந்த பெண்ணை சந்திக்க சென்றபோது, அவரை சிலர் பிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர். பின்னர் உயிரோடு தீ வைத்துள்ளனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று மோனுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே மோனு உயிரிழந்தார். தன் மகன் உயிரோடு எரிக்கப்பட்டது பற்றி கேள்விப்பட்ட அவரது தாயார், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    இது ஆணவக் கொலைதான் என மோனுவின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரன்தீப் சுர்ஜேவாலா

    இந்த தாக்குதல் சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்திருப்பதுடன், உ.பி. பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.

    “பாஜக ஆட்சியில், மேலும் ஒரு தலித் உயிருடன் எரித்து கொல்லப்பட்டிருக்கிறார். இது மனிதாபிமானமற்ற மற்றும் வெட்கக்கேடான செயல். அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, சமூக கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கும் பாதுகாப்பு இல்லை” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.
    Next Story
    ×