search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது- ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு

    ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே பரூக் அப்துல்லாவை நேற்று இரவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனால் விசாரணை எதுவும் இன்றி இரண்டு ஆண்டுகள் வரை பரூக் அப்துல்லாவை காவலில் வைத்திருக்க முடியும்.

    பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், அவரது வீடு துணை சிறையாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர் தனது உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க எந்த தடையும் இல்லை.

    ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டமானது, மரக் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர்  இளைஞர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×