search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராத ரசீது
    X
    அபராத ரசீது

    ரூ.6.5 லட்சம் அபராதம்: காரணம் என்ன? போக்குவரத்து விதிமீறல் தான்

    ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறியதாக லாரி உரிமையாளருக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

    பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். புதிய அபராத விதிமுறைகளால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படும் எனக்கூறி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசார் இன்று வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

    அப்போது நாகாலாந்தை சேர்ந்த லாரி ஒன்றை மறித்து சோதனையில் ஈடுபட்ட போது அது போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், காற்று மற்றும் ஒலி மாசுபாடு, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல், உரிமம் இல்லாமல் லாரியை இயக்குதல், முறையாக வாகன காப்பீடு இன்மை ஆகிய போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதி மீறியதாக மொத்தம் 6 லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகைக்கான ரசீதை லாரியின் உரிமையாளரிடம் போக்குவரத்து போலீசார் வழங்கினர்.   

    புதிய வாகன சட்டத்தின் படி, நாட்டில் இதுவரை போக்குவரத்தை மீறியதாக வழங்கப்பட்ட அதிகபட்ச அபராதத்தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×