search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் நடந்த வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற போது எடுத்த படம்.
    X
    அசாமில் நடந்த வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற போது எடுத்த படம்.

    வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது- அமித்ஷா

    வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது என உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    கவுகாத்தி :

    இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதைப்போல அரசியல் சாசனப்பிரிவு 371-ன் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக அரசியல் சட்டப்பிரிவு 371-ம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியானது. ஆனால் இதை உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று நடந்த வடகிழக்கு கவுன்சிலின் 68-வது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், 371-வது பிரிவும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொள்ள முயன்று வருகின்றன. ஆனால் இங்கே நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது, அரசியல் சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக நடவடிக்கைதான். இதைத்தான் பாராளுமன்றத்திலும் நான் அப்போது கூறினேன்.

    ஆனால் 371-வது பிரிவு ஒரு சிறப்பு வழிமுறை ஆகும். இரண்டு பிரிவுக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசமே இதுதான். எனவே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது போல, 371-வது பிரிவும் ரத்து செய்யப்படாது. 371-வது பிரிவு மற்றும் அதன் கீழ் உள்ள 371 (ஏ) முதல் 371 (ஜே) வரையிலான அனைத்து பிரிவுகளையும் மோடி அரசு மதிக்கிறது. அவை சேதப்படுத்தப்படாது.

    இதனால் வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து ரத்து பாதிக்கப்படாது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    2 நாள் பயணமாக அசாம் சென்றுள்ள அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியானபின் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து நேற்று மாலையில் ஆய்வு செய்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலையில் காமாக்யா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தும் அவர், பின்னர் பா.ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். 
    Next Story
    ×