search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ சிவன்
    X
    இஸ்ரோ சிவன்

    ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் - இஸ்ரோ சிவன்

    ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் கருவியை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று அதிகாலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    லேண்டரின் வேகத்தை மிகத்திறமையாக கட்டுப்படுத்திய இந்திய விஞ்ஞானிகள் கடைசி நிமிடத்தில் லேண்டர் திசை மாறியதால் எதிர் பாராதவிதமாக பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

    நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் லேண்டர் வந்து கொண்டிருந்தபோது அதற்கும் பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக திட்டமிடப்பட்ட பகுதியில் தரை இறங்காமல் நிலவின் வேறொரு பகுதியில் லேண்டர் தரை இறங்கி உள்ளது.

    அது சிக்னலை தராததால் அதன் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அதை கண்டுபிடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணிகள் நேற்றே தொடங்கி விட்டது.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் தூர்தர்‌ஷன் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டிகள் விவரம் வருமாறு:-

    லேண்டர் கருவியுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த 14 நாட்களுக்குள் லேண்டரின் தொடர்பை பெற அனைத்து வித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டால் நிலவில் இருந்து தேவையான தகவல்களை நமது ஆய்வுக்கு பெற முடியும். அறிவியல் என்பது சோதனை என்பதால் பின்னடைவை கண்டு மனம் தளரவேண்டாம் என்று பிரதமர் எங்களை ஊக்கப்படுத்தி உள்ளார். எனவே முன்பைவிட சிறப்பாக செயல்படுவோம்.

    லேண்டர் கருவியில் என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. லேண்டரின் அனைத்து பணிகளும் சிறப்பாகவே இருந்தது. கடைசியாக நாங்கள் அதை சரிபார்த்தபோது எல்லாம் சிறப்பாக இருந்தன.

    பிரதமர் மோடி

    என்றாலும் அதன் தகவல் தொடர்பு கடைசி நிமிடத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது. அது எப்படி உள்ளது என்பதற்கான தகவல்கள் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். அதன்பிறகு லேண்டர் பற்றிய முழு தகவல்களும் வெளியிடப்படும்.

    நிலவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டர் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அதிலிருந்து நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்க உள்ளன. குறிப்பாக நிலவின் தென்துருவம் பற்றிய புதிய தகவல்கள் ஆர்பிட்டர் மூலம் நமக்கு கிடைக்கும்.

    உலகில் இதுவரை எந்த நாட்டுக்கும் நிலவின் தென் துருவ பகுதிகள் பற்றிய ஆய்வு தகவல்கள் கிடைக்கவில்லை. முதன்முதலாக ஆர்பிட்டர் மூலம் அது நமக்கு கிடைக்க உள்ளது. உலகுக்கே அது புதிய தகவல்களை தருவதாக அமையும்.

    ஆர்பிட்டரில் தேவைக்கு அதிகமாகவே எரிபொருட்கள் உள்ளது. எனவே அதை சுமார் 7½ ஆண்டுகள் ஆய்வு பணிக்கு பயன்படுத்த முடியும். முதலில் ஆர்பிட்டர் ஓராண்டுதான் செயல்படும் என்று தெரிவித்தோம். ஆனால் எரிபொருட்கள் இருப்பதால் 7½ ஆண்டுகள் வரை தங்குதடையின்றி செயல்படும்.

    இதன்மூலம் நிலவின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து தகவல்களை பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் சந்திரயான்-2 திட்டம் முழுமையான வெற்றியை பெற்றுள்ளது.

    லேண்டர் கருவியில் ஏற்பட்ட சிறு பின்னடைவு காரணமாக இஸ்ரோவின் அடுத்த திட்டங்களில் எந்த தாமதமும் ஏற்படாது. மற்ற விண்வெளி திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறித்த காலத்துக்கு நடை பெறும்.

    அடுத்த மாதம் இறுதியில் கார்டோ செயற்கைகோள் ஏவப்படும். அடுத்த ஆண்டு ‘கங்கயான்’ திட்டம் செயல்படுத்தப்படும். சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரைஇறங்கும் நிகழ்ச்சியை ஏராளமான மாணவர்கள் பார்த்தனர். இது எங்களுக்கு எதிர்கால ஆய்வு தொடர்பான புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

    மேலும் பிரதமர் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியது மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ளது. பிரதமர் கூறிய உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று நடந்த சம்பவத்துக்கு பிறகு உண்மையில் நாங்கள் மனம் தளர்ந்து இருப்போம். ஆனால் பிரதமர் கொடுத்த ஒத்துழைப்பும், உற்சாகமும் எங்களை மீண்டும் ஆய்வு பணிக்கு சுறுசுறுப்பாக கொண்டுவந்துள்ளது. எங்களது இலக்குகள் நோக்கி நாங்கள் மீண்டும் உறுதியாக செயல்படுவோம்.

    சந்திரயான்-2 திட்டத்தில் பின்னடைவு என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தின் நோக்கங்களில் 95 சதவீத வெற்றியை நாங்கள் எட்டி இருக்கிறோம். எனவே லேண்டரில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து இந்த திட்டத்தை தோல்வி என்று சொல்ல முடியாது.

    ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும். ஆர்பிட்டரில் உள்ள அதிநவீன ரேடார் கருவி மூலம் நிலவின் தென்துருவ பகுதி துல்லியமாக ஆராயப்படும்.

    நிலவின் தென்பகுதியில் தண்ணீர் துளிகள், பனிக்கட்டிகள் எந்த அளவுக்கு உள்ளன என்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற் கொள்ளப்படும். ஆர்பிட்டர் மூலம் நிலவில் உள்ள அனைத்து வகை கனிம வளங்களையும் கண்டுபிடிக்க முடியும். அதற்கு ஏற்ப ஆர்பிட்டரில் 8 வகையான அதிநவீன கருவிகளை இணைத்துள்ளோம். எனவே ஆர்பிட்டர் மூலம் நமது ஆய்வுப்பணிகள் 100 சதவீத வெற்றியை எட்டும்.

    இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

    லேண்டர் கருவியானது நிலவின் தென்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் 2 பகுதிகளில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த 2 இடங்களும் 1.6 கி.மீ. தூர இடைவெளியில் இருந்தன. இதில் முதல் இடத்தில் லேண்டரை தரை இறக்க நேற்று அதிகாலை முயற்சி நடந்தது.

    ஆனால் அதற்கு முன்னதாகவே அது வழிமாறி சென்று விட்டது. லேண்டரின் வேகம் காரணமாக அது திசை மாறியதாக கருதப்படுகிறது. எனவே லேண்டர் கருவி ஏற்கனவே திட்டமிட்ட பகுதியில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவுக்குள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது.

    தற்போது நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் கருவி இன்னும் 3 நாட்களுக்குள் நிலவின் தென்பகுதிக்கு மீண்டும் வரும். அப்போது அது நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரை இறங்கியதாக கருதப்படும் இடங்களில் துல்லியமாக படம் எடுத்து அனுப்ப உள்ளது.

    அப்போது லேண்டர் இருக்கும் இடமும் தெரிய வரலாம். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் பற்றிய தகவல் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆவலுடன் உள்ளனர்.

    நிலவின் மேற்பகுதியில் லேண்டர் கருவி தரை இறங்கும்போது நொறுங்காமல் இருந்து இருந்தால் ஆர்பிட்டர் மூலம் மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் லேண்டர் கருவி நிலவின் தரையில் மிக வேகமாக மோதி துண்டு துண்டாக சிதறி இருக்கும் பட்சத்தில் அதை கண்டுபிடிப்பது சற்று சவாலான பகுதியாக இருக்கும்.

    இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “லேண்டர் கருவி எந்த நிலையில் இருந்தாலும் சரி, மிகத்துல்லியமாக படம் பிடிக்கும் ஆர்பிட்டர் கேமரா மூலம் அதன் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவோம்” என்றார்.

    Next Story
    ×