search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    பாஜகவுக்கு செல்ல மறுத்ததால் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்- சித்தராமையா

    பா.ஜனதாவுக்கு செல்ல மறுத்ததால் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மைசூருவில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
    மைசூரு :

    காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.

    அதுபோல் மைசூருவில் காந்தி சதுக்கத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், எம்.எல்.ஏ.க்கள் தன்வீர்சேட், யதீந்திரா சித்தராமையா, மகளிர் காங்கிரஸ் தலைவர் புஷ்பலதா அமர்நாத், அனில்சிக்கமாது, மைசூரு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூர்த்தி, மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு எதிராகவும், உடனே டி.கே.சிவக்குமாரை விடுவிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதற்கிடையே பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு திடீரென்று வந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் சதியால் அமலாக்கத்துறை மூலமாக டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தங்களது கைபாவைகளாக வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது மோடியும், அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது அரசியலமைப்புக்கு எதிரான செயல். டி.கே.சிவக்குமார் யார் சொத்தையும் கொள்ளையடிக்கவில்லை. தேச விரோதியும் அவர் அல்ல. அவர் ஒரு தொழில் அதிபர் ஆவார். அவர் தான் சம்பாதித்த சொத்துக்கு கணக்கு வைத்துள்ளார். வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது போது அவர் முழுஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

    டி.கே.சிவக்குமார்

    மேலும் அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேரில் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பக்கம் நியாயம் உள்ளது. அவருக்கு எதுவும் ஆகாது வெற்றியுடன் திரும்பி வருவார்.

    டி.கே.சிவக்குமாரை பா.ஜனதாவுக்கு இழுக்க அக்கட்சி தலைவர்கள் வழக்குகளை ரத்து செய்கிறோம் என்பது உள்பட பல்வேறு ஆசைகளை காட்டியுள்ளனர். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு செல்ல விரும்பவில்லை. இதுகுறித்து என்னிடம் அவர் தெரிவித்தார். அவர் பா.ஜனதாவுக்கு செல்ல மறுத்ததால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    குறிப்பாக குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை டி.கே.சிவக்குமார் தடுத்து பாதுகாத்தார். இதனால் தான் பா.ஜனதா அரசு தற்போது அவர் மீது பழிவாங்கும் அரசியல் செய்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வது புதிது அல்ல. சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே காங்கிரசார் சிறை வாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியில் எந்தந்த தலைவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்களோ அவர்களை முடக்கி, கட்சியின் பலத்தை குறைக்க பா.ஜனதா அரசு இவ்வாறு செய்கிறது. ஆனால் பா.ஜனதாவினரின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. விரைவில் பா.ஜனதாவுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நாம் காந்தி போதித்த அகிம்சை வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×