search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு நீதிமன்றம்
    X
    சிறப்பு நீதிமன்றம்

    சட்ட விரோத பண பரிமாற்றம் - கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப். 13 வரை விசாரணை காவல்

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில முன்னாள் மந்திரி சிவக்குமாரை செப்டம்பர் 13 வரை விசாரணை காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
    புதுடெல்லி:

    கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

    கடந்த 2017, ஆகஸ்டில் மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய தொழில் பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்கள் என்று டெல்லி, பெங்களூருவில் உள்ள 60-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இச்சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் கணக்கில் காட்டாத ரூ.8.59 கோடி சிக்கியது. அத்துடன், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் முதல் குற்றவாளியாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை டெல்லியில் நேற்று கைது செய்தனர்.

    டிகே சிவக்குமார்

    இந்நிலையில், முன்னாள் மந்திரி சிவக்குமாரை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    சிவக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது சிவக்குமாருக்கு இன்று முழுவதும் உணவு வழங்கவில்லை என்பதை நீதிபதி அஜய் குமார் குஹாவிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவக்குமாரை செப்டம்பர் 13ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    சிவக்குமார் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×