search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கர்நாடக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்- சித்தராமையா பேட்டி

    கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா அரசு கவிழ்ந்து எந்த நேரத்திலும் சட்டசபைக்கு தேர்தல் வரலாம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

    கர்நாடக மாநிலத்தில் தற்போது அமைந்துள்ள பா.ஜனதா அரசு, ஆபரே‌ஷன் தாமரையால் உருவான சட்டத்துக்கு புறம்பான குழந்தையாகும். மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்ட விரோதமாக பா.ஜனதாவுக்கு இழுத்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் அரசை அமைத்திருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா அரசு அமைவதற்கு மக்கள் தீர்ப்பளிக்கவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழ்வது தவிர்க்க முடியாததாகும். அவர்களுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

    மெஜாரிட்டிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 17 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்கவும் நாங்கள் தயார். ஆனால், எந்த நேரத்திலும் எடியூரப்பா அரசு கவிழ்ந்து, சட்டப் பேரவைக்கு தேர்தல் வரலாம். இதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
    எடியூரப்பா

    வாரத்தில் 3 நாட்கள் எடியூரப்பா டெல்லிக்கு சென்று வருகிறார். பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க இயலாத பரிதாப நிலையில் எடியூரப்பா உள்ளார். சட்டப்பேரவைக்கு இடைக்காலதேர்தல் வந்தால், எங்களுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி ஏற்படும். மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும், எங்களுக்கும் மோதல் இல்லை. மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரசும், மஜதவும் எப்படி மோதிக்கொள்ள முடியும். மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமும், காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×