search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்
    X
    டாக்டர்

    ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் வரை ஜெயில்- மத்திய அரசு புதிய சட்டம்

    ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடைபெறும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் 75 சதவீத டாக்டர்கள் பணியில் இருக்கும்போது தாக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அவர்கள் மீது கொலை மிரட்டல், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி எச்சரித்தல் போன்றவையும் நடப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதோடு ஆஸ்பத்திரிகள் மீதும் அதிகமான அளவில் வன்முறை கும்பல் தாக்குவதாகவும் தெரிவித்து இருக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் ஜுனியர் டாக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது.

    இந்த குழு மற்றும் இந்திய மருத்துவ சங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் டாக்டர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டம் இருக்கிறது.

    இந்த புதிய மசோதா குறித்து மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:-

    டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவத்தை புறக்கணித்து விட முடியாது. இதற்கு கண்டிப்பாக முடிவு கட்ட வேண்டும். மத்திய அரசு இதற்காக புதிய சட்டம் கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டோம். விரைவில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன்பிறகு மத்திய சுகாதார அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான மசோதா பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள், பணியாளர்களை தாக்கினால் 3 முதல் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். வரைவு மசோதாவில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதேபோல ஆஸ்பத்திரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
    ஜெயில்
    அதன்படி ஆஸ்பத்திரி, சுகாதார பராமரிப்பு ஆகியவற்றின் சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டால் 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். அதோடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் மூலம் டாக்டர்கள், மருத்துவ பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
    Next Story
    ×