search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    இந்து அமைப்பினரின் வாதம் முடிந்தது- அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

    அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரும் நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம்லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கும் வழங்கி உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

    3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்மந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்று மத்தியஸ்தர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தனர்.

    சமரச பேச்சு தோல்வி அடைந்ததை தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், அசோக்பூ‌ஷன், பாப்டே, அப்துல்நாசிர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன்பு கடந்த 6-ந்தேதி முதல் நாள் தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அயோத்தி வழக்கு


    இந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 16 நாட்கள் நடந்த இந்த விசாரணையில் இந்து அமைப்புகளின் வாதம் நிறைவடைந்தது. ராம்லல்லா, நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளின் வக்கீல்கள் வாதம் நிறைவு பெற்றன.

    சர்ச்சைக்குரிய பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இந்து அமைப்பினர் தங்களது வாதத்தில் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் வாதம் தொடங்குகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அவர்களது வாதம் தொடங்குகிறது.

    இந்த வாதங்களுக்கு பிறகு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும். அநேகமாக நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.
    Next Story
    ×