search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரி
    X
    வரி

    வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை

    வருமான வரி விகிதங்களை குறைக்க மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்து இருக்கிறது. அதன்படி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால், மாதச்சம்பளம் பெறுவோருக்கு சலுகைகள் கிடைக்கும்.
    புதுடெல்லி:

    நமது நாட்டில் தற்போதுள்ள வருமான வரி சட்டம் 58 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கவும், வருமான வரி சட்ட பிரிவுகளை எளிமையாக்கவும், வரி வசூலை அதிகரிக்கவும் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்த குழுவுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைவர் ஆவார். இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அளித்து உள்ளது.

    அதில் தற்போது தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சம் என்று இருப்பதை மாற்றி அமைக்க பரிந்துரைக்கவில்லை. மேலும் ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான 5 சதவீத வரி விதிப்பை மாற்றவும் சிபாரிசு செய்யவில்லை.

    அதேநேரத்தில் 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என 5 அடுக்கு வரி முறையை கொண்டு வர சிபாரிசு செய்து உள்ளது.

    தற்போது 5 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம் என 3 அடுக்கு வரி முறைதான் அமலில் இருந்து வருகிறது.

    இதன்படி, தற்போது ரூ.2½ லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    ரூ.2½ லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

    இந்த வரி விதிப்பு விகிதாசாரங்களை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்க நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.

    * ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கலாம். (இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரிக்கழிவு கிடைக்கும்)

    * ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கலாம்.

    * ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கலாம்.

    * ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கலாம்

    * ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 35 சதவீத வரி விதிக்கலாம்; இவர்களுக்கான சர்சார்ஜை (கூடுதல் வரி) ரத்து செய்து விடலாம்.

    இப்படி வருமான வரி அடுக்குகளை மாற்றி அமைக்கிற போது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தனிநபருக்கு வருமான வரி கட்டுவது சுமையாக தெரியாது.

    குறிப்பாக ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரி செலுத்தி வந்த நிலையில் அது 10 சதவீதமாக குறையும்.

    இந்த வரிக்குறைப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

    இதேபோன்று, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்தி வந்த நிலையில், இப்போது ரூ.20 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்று வந்தால் அந்த தரப்பினரும் பலன் அடைவார்கள்.

    பிரதமர் மோடி

    இந்த வரி குறைப்பு, வரி செலுத்துவோரின் வாங்கும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக அரசுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் பெருகும். உற்பத்தியும் பெருகும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சங்கிலித்தொடர் போல நடக்கிற மாற்றங்கள் காரணமாக பொருளாதாரம் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கை தற்போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பரிசீலனையில் உள்ளது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்து இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×