search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    எடியூரப்பா ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாது- சித்தராமையா

    கர்நாடகத்தில் எடியூரப்பா அரசு கவிழ்வதை தவிர்க்க முடியாது என்றும், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவது உறுதி என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் கடந்த மாதம்(ஜூலை) 26-ந் தேதி பா.ஜனதா அரசு அமைந்தது. பா.ஜனதா ஆட்சி அமைந்து 25 நாட்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு பிறகு மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. 3 துணை முதல்-மந்திரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எதிர்பார்த்த இலாகா கிடைக்காத மந்திரிகள், துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காத மூத்த மந்திரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் மந்திரி ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் வட கர்நாடகத்தில் தீவிர போராட்டம் நடத்தினர். இது எடியூரப்பா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    “கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. இது ‘ஆபரேஷன் தாமரை‘யின் சட்டவிரோதமான குழந்தை. பா.ஜனதா, குதிரை பேரம் நடத்தி பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தியது, கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை மிரட்டியது போன்றவற்றின் மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்துள்ளது.

    எடியூரப்பா

    எடியூரப்பா அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லை. இந்த பா.ஜனதா அரசு எந்த நேரத்திலும் கவிழும். எடியூரப்பா அரசு கவிழ்வதை தவிர்க்க முடியாது. அதனால் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவது உறுதி. 3 நாட்களுக்கு ஒரு முறை எடியூரப்பா டெல்லிக்கு ஓடுகிறார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் அனுமதி இல்லாமல் அவர் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார். அவர் கட்சி மேலிடத்தின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது. இது தான் பா.ஜனதாவின் உண்மையான சாயம்.

    கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி. எங்களின் அரசியல் எதிரி மதவாத கட்சியான பா.ஜனதா தான். ஜனதா தளம்(எஸ்) கட்சி அல்ல. அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிராக எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மதசார்பற்ற கட்சிகளுக்கு மதவாத சக்திகள் தான் எதிரிகள், பிற மதசார்பற்ற கட்சிகள் அல்ல.”

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
    Next Story
    ×