search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதி கருவூலத்தில் ஆபரணங்கள் மாயம்- தேவஸ்தான ஊழியர் சம்பளத்தில் பிடித்தம்

    திருப்பதி திருமலை தேவஸ்தான கருவூலத்தில் இருந்து ரூ.7.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதையடுத்து, பணியில் இருந்த ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான தங்க நகை ஆபரணங்கள் கோவில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நகைகள் ஆவணங்களில் உள்ளபடி சரியான அளவில் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்து வருகின்றனர். நகைகளை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வசதியாக அவர்களின் பார்வைக்கும் வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் கருவூலத்தில் இருந்து 5 கிலோ ஆபரணங்கள் மாயமானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆந்திர மாநில பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ்ரெட்டி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களில், 5 கிலோ 400 கிராம் எடையுள்ள வெள்ளி கிரீடம், தங்க மோதிரங்கள் 2, தங்க நெக்லஸ்கள் 2 ஆகியவை காணாமல் போய்விட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருவூலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்போது ஆபரணங்கள் மாயமானது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உண்மையை வெளியில் கூறத் தயங்கிய தேவஸ்தான அதிகாரிகள் காணாமல்போன ஆபரணங்களின் மதிப்பு ரூ.7 லட்சத்து 36 ஆயிரத்து 376 என்று மதிப்பீடு செய்து, அதற்கான தொகையை கருவூலத்தின் உதவி நிர்வாக அதிகாரி சீனிவாசலுவின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.25 ஆயிரம் பணத்தை ரகசியமாக பிடித்தம் செய்து வருகின்றனர்.

    இதுதவிர தேவஸ்தானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சில ஆவணங்களில் இருக்க வேண்டிய அளவை விட சற்று அதிகமாக ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.19 லட்சம் அதிக மதிப்புள்ள ஆபரணங்களை காணவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

    எனவே பக்தர்கள் மத்தியில் தேவஸ்தானத்தில் இருப்பு உள்ள ஆபரணங்களை பற்றிய தெளிவான மனநிலையை ஏற்படுத்தும் வகையில், ஆபரண இருப்பு பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை தேவஸ்தானம் வெளியிட வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வருவோம் என்றார்.

    இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

    கருவூலத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மொத்தம் ரூ.7 லட்சத்து 36 ஆயிரத்து 376 மதிப்புள்ள வெள்ளி கிரீடம், 2 தங்க மோதிரங்கள், 2 நெக்லஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

    மேலும் 11 கிலோ 752 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருட்கள், 369 கிராம் எடையுடைய பவளக்கற்கள், 936 கிராம் எடையுடைய கற்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கூடுதலாக இருப்பதும் அப்போது தெரியவந்தது.

    கருவூலத்தில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படும் சமயங்களில் இருக்கும் பொருளை சரிபார்த்து, அதுவரை பணியில் இருந்த அதிகாரி புதிய அதிகாரியிடம் ஒப்படைப்பது வழக்கம்.

    2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி கருவூலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், அதுவரை காணாமல்போன பொருள்களுக்கான இழப்பீட்டு தொகையாக ரூ. 7 லட்சத்து 36 ஆயிரத்து 376 ரூபாயை பணியில் இருந்த உதவி நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசலுவின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் இதுவரை அவருடைய சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கருவூலத்தில் இருப்பில் இருக்கும் ஆபரணங்களை துல்லியமாக சரிபார்க்கும் வகையில் அடுத்த மாதம் மீண்டும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. தேவஸ்தானத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மிகவும் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×