search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடக மந்திரிசபை மீண்டும் நாளை விரிவாக்கம்

    கர்நாடக மந்திரிசபை மீண்டும் நாளை (புதன் கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதிருப்தியாளர்கள் 3 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பா.ஜனதா அரசு அமைந்தது. முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார். 25 நாட்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. மாதுசாமி, ஜெகதீஷ் ஷெட்டர், அஸ்வத் நாராயண், ஈசுவரப்பா, பிரபுசவான், சசிகலா ஜோலே உள்பட 17 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    மந்திரி பதவி கிடைக்காததால் மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, திப்பா ரெட்டி, ரேணுகாச்சார்யா, ராஜூகவுடா உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக அவர்கள் வெளிப்படையாக பேசினர். இதனால் ஆட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிக்கலை தவிர்க்கும் பொருட்டு, அதிருப்தியாளர்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, திப்பாரெட்டி ஆகிய 3 பேருக்கு மந்திரி பதவி வழங்க எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கர்நாடக மந்திரிசபையை மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்தார். ஆனால் இன்று கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின் குமார் கட்டீல் பதவி ஏற்கிறார். இந்த விழா நடைபெறுவதையொட்டி இன்று நடைபெற இருந்த மந்திரிசபை விரிவாக்கம் நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கவர்னர் மாளிகையில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய மந்திரிகளாக உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, திப்பாரெட்டி ஆகிய 3 பேர் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள பாலச்சந்திர ஜார்கிகோளிக்கு கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. 
    Next Story
    ×