search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல்-மந்திரிகளுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.
    X
    உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல்-மந்திரிகளுடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.

    மாநில அரசுகளுடன் இணைந்து நக்சலைட்களை ஒழிப்போம் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி

    மாநில அரசுகளுடன் இணைந்து நக்சலைட் களை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டெல்லியில் நக்சலைட், மாவோயிஸ்டு போன்ற இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இதில் முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), நவீன்பட்நாயக் (ஒடிசா), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), கமல்நாத் (மத்தியபிரதேசம்), ரகுபர்தாஸ் (ஜார்கண்ட்), பூபேஷ் பாகெல் (சத்தீஷ்கார்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) ஆகியோர் கலந்துகொண்டனர். 10 மாநிலங் களில் எஞ்சிய மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் நக்சலைட்களுக்கு எதிராக தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள், அந்த முயற்சிக்கு கிடைத்துள்ள பலன்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மாவோயிஸ்டு அச்சுறுத்தலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட மாநில முதல்-மந்திரிகளுடன் மிகவும் பலனுள்ள வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இடதுசாரி பயங்கரவாதம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாங்கள் அதனை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அமித்ஷா உள்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் இதுபோன்ற கூட்டம் இப்போது தான் முதல்முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பல முதல்-மந்திரிகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:-

    நக்சலைட்களால் 2009-13 காலகட்டத்தில் 8,782 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதில் பாதுகாப்பு படையினர் உள்பட 3,326 பேர் பலியாகி உள்ளனர். 2014-18-ல் 4,969 வன்முறை சம்பவங்களில் 1,321 பேர் பலியாகினர். வன்முறை சம்பவங்கள் 43.4 சதவீதமும், பலியாவது 60.4 சதவீதமும் குறைந்துள்ளது.

    2009-2018-ல் 1,400 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 310 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதில் 88 பேர் பலியாகி உள்ளனர்.

    மாவோயிஸ்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு சிறப்பு நிதி உதவியாக வழங்கிவருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கூட்ட முடிவில் மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், நரேந்திரசிங் தோமர், அர்ஜுன் முண்டா, மகேந்திரநாத் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு முதல்-மந்திரிகளுடன் சாலை, தொலைதொடர்பு, விவசாயம் உள்பட சில பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தனர்.
    Next Story
    ×