search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்
    X
    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்

    ஸ்ரீநகரில் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் அமல்

    ஐ.நா. பார்வையாளர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததால் ஸ்ரீநகரில் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் ஜம்முவில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளன. அங்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தொலைதொடர்பு சேவைகளும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

    ஆனால் காஷ்மீரில் சுமுக நிலை இன்னும் திரும்பவில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடித்து வருகின்றன. எனினும் அங்கும் ஒரு சில இடங்களில் சமீபத்தில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக, மக்கள் நடமாடவும், வாகன இயக்கத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை கண்டித்து ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ பார்வையாளர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துமாறு பிரிவினைவாதிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான நோட்டீசுகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீநகரில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டன. குறிப்பாக அந்த அலுவலகம் அமைந்துள்ள லால் சவுக், சொனாவர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மக்கள் தொழுகை முடித்து போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க படைகள் உஷார்படுத்தப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதி உள்ளிட்ட முக்கியமான மசூதிகளில் நேற்றும் தொழுகைக்கு அனுமதிக்கவில்லை.

    ஸ்ரீநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5-ந்தேதி முதல் கடைகள், சந்தைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. பலத்த கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கே கொண்டு வந்து பொருட்களை விற்கும் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதைப்போல காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் மற்றும் முழு அடைப்பு போன்ற சூழலே நிலவுவதாக தகவல் கிடைத்துள்ளன. குறிப்பாக பாரமுல்லா, கண்டர்பல், பட்காம், சோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.

    காஷ்மீர் முழுவதும் இதுபோன்ற நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இங்கு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கடந்த 19-ந்தேதியே திறக்க உத்தரவிடப்பட்ட போதும், திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளன.

    அடிக்கடி போராட்டங்கள் நடைபெறும் இந்த பிராந்தியத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்தால், மாணவர்களை அழைத்து செல்லுமாறு பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்படும். ஆனால் தகவல் தொடர்பு முடக்கப்பட்டு உள்ள தற்போதைய நிலையில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் எவ்வாறு தகவல் அனுப்புவார்கள்? என்ற அச்சத்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரும் தயங்கி வருகின்றனர்.

    அங்குள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. அனைத்து தேர்வுகளையும் தள்ளி வைத்திருக்கின்றன. பயிற்சி மற்றும் டியூஷன் மையங்களும் மூடியே கிடக்கின்றன.

    ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான சோராவில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வந்த சுமார் 300 பேர், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

    இதைப்போல காஷ்மீரின் வேறு சில பகுதிகளிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக கூறியுள்ள அதிகாரிகள், இதைத்தவிர அந்த பிராந்தியம் முழுவதும் பெரும்பாலும் அமைதியாக இருப்பதாக தெரிவித்தனர். குறிப்பிடத்தக்க அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறினர்.

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் ராணுவத்தின் வடபிராந்திய தளபதி ரன்பிர் சிங் நேற்று எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டன.

    அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வு செய்த அவர், படைகளின் தயார் நிலை குறித்து திருப்தி தெரிவித்தார். மேலும் அங்கு விழிப்புடன் பணியாற்றி வரும் வீரர்களுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
    Next Story
    ×