search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎல் சந்தோஷ் எடியூரப்பா
    X
    பிஎல் சந்தோஷ் எடியூரப்பா

    கர்நாடக பாஜக புதிய தலைவர் நியமனம்: பிஎல் சந்தோஷ் ஆதிக்கத்தால் எடியூரப்பா அதிர்ச்சி

    கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமனத்தில் பி.எல்.சந்தோஷ் ஆதிக்கத்தால் முதல்-மந்திரி எடியூரப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தவர் எடியூரப்பா. இவர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அதற்கு முன்பு, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் அவர் கர்நாடக பா.ஜனதா தலைவர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை நிர்வகித்து வந்தார்.

    25 நாட்களுக்கு பிறகு கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 மந்திரிகள் பதவி ஏற்றனர். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதால், கட்சியின் மாநில தலைவர் பதவி வேறு ஒருவருக்கு, அதாவது சி.டி.ரவி அல்லது அரவிந்த் லிம்பாவளி ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என்று உறுதியான தகவல்கள் வெளியாயின.

    மேலும் கர்நாடக பா.ஜனதாவுக்கு புதிய தலைவர் நியமனம், இன்னும் சில மாதங்களுக்கு பிறகே நடைபெறும் என்று எடியூரப்பா நம்பினார். இதற்கிடையே எடியூரப்பாவை அரவிந்த் லிம்பாவளி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மந்திரி பதவி கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம், கட்சி மாநில தலைவர் பதவியை பெற்று தருகிறேன் என்று எடியூரப்பா அவரிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காதபோது, மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்ற நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஒரு அறிவிப்பை வெளியிட்டு, கர்நாடக பா.ஜனதா தலைவராக நளின்குமார் கட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

    பா.ஜனதா மேலிடத்தின் இந்த அறிவிப்பை கண்டு, முதல்-மந்திரி எடியூரப்பா சற்றே அதிர்ச்சி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், நளின்குமார் கட்டீல், பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசுக்கு நெருக்கமானவர். இப்படி ஒரு அறிவிப்பு வரும் என்று எடியூரப்பா எதிர்பார்க்கவே இல்லை.

    கட்சியின் மாநில தலைவர் பதவியில் அமரலாம் என்று கனவில் இருந்த அரவிந்த் லிம்பாவளி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். கர்நாடக பா.ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்த் லிம்பாவளி, மந்திரி பதவி, கட்சி தலைவர் பதவி என இரண்டும் கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளார்.

    பிஎல் சந்தோஷ், எடியூரப்பா,

    பி.எல்.சந்தோஷ் டெல்லியில் இருந்தபடி கர்நாடக பா.ஜனதாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகிறார்கள். கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நளின்குமார் கட்டீலுக்கு எடியூரப்பா இதுவரை வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

    முதல்-மந்திரி பதவியில் இருந்தாலும் எடியூரப்பா நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாத நிலை உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எடியூரப்பா, பி.எல்.சந்தோஷ் என்ற 2 அதிகார மையங்கள் உருவாகி இருப்பது தான் அதற்கு காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நளின்குமார் கட்டீல் நியமனத்திற்கு எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    நளின்குமார் கட்டீல் தலைவராக நியமிக்கப்பட்ட உடனே, எடியூரப்பாவை மீண்டும் சந்தித்து பேசிய அரவிந்த் லிம்பாவளி, தனது நிலை என்ன என்று கேட்டதாகவும், அதற்கு அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி தலைவர் பதவிக்கு நளின்குமார் கட்டீலின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

    அப்போது எடியூரப்பாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அது சாத்தியமில்லாமல் போனதாக கூறப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்புவதாலும், 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் வர உள்ளதாலும், மாநில பா.ஜனதா அரசு நிலையற்ற தன்மையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    இந்த அரசு நிலையாக நீடிக்க வேண்டும் என்றால், இடைத்தேர்தலில் குறைந்தது 8 இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை உள்ளது. இதுபோன்ற பல்வேறு சவால்கள் எடியூரப்பாவுக்கு உள்ளன. இந்த சவால்களை அவர் எப்படி எதிர்கொண்டு ஆட்சியை சுமுகமாக நடத்தப்போகிறார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Next Story
    ×