search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    மீண்டும் நிராகரிப்பு... ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இழுபறி

    முன்ஜாமீன் தொடர்பாக ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    அந்த மனுவை அவசரமாக விசாரிக்கும்படி நீதிபதி என்.வி.ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று காலை கோரிக்கை வைத்தனர். ஆனால், வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி ரமணா, இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பி வைத்தார். 

    ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரம் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. 

    எனவே, இன்று பிற்பகல் மீண்டும் நீதிபதி என்.வி.ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று, இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இடைக்கால நிவாரணம் எதுவும் தற்போதைக்கு வழங்க முடியாது என்றும் நீதிபதி ரமணா கூறிவிட்டார்.

    ப.சிதம்பரம்

    “உங்கள் வழக்கை இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் எப்படி விசாரிக்க முடியும்? உங்கள் மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் உள்ளன. அந்த பிழைகளை சரி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனு பட்டியலிடப்பட்டு அதன்பிறகு விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார். 

    இவ்வாறு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு, விசாரணை தாமதம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.  அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தபிறகு, மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
    Next Story
    ×