search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா மழை
    X
    கேரளா மழை

    கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

    கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளிலும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    கேரளா நிலச்சரிவு

    நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம், கவளப்பாறை பகுதியில் இருந்து நேற்று அனிஷ் (வயது 37), பாலன் (48) ஆகிய 2 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டது. இதுவரை கேரளாவில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 1791 வீடுகள் மழையால் முழுமையாக இடிந்து விட்டது. 14559 வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து முகாம்களில் தங்கி இருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். தற்போது 13 ஆயிரத்து 42 பேர் மட்டுமே முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்யுமென்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×