search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ சிவன்
    X
    இஸ்ரோ சிவன்

    மணமகள் புகுந்த வீட்டுக்கு போவதுபோல, சந்திரயான்2 நிலவுக்கு சென்றுள்ளது -இஸ்ரோ சிவன்

    இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
    பெங்களூர்:

    நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2  விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க  திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இயக்கப்பட்டது.

    இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    திட்டமிட்டபடியே சந்திரயான் 2 நிலவை நோக்கி முன்னேறியது. முதல் நாளில் இருந்து இன்று வரை எப்படி திட்டமிடப்பட்டதோ, அப்படியே சந்திரயான் 2 சீரான முன்னேற்றம் பெற்று வருகிறது. நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும்.

    வரும் செப்டம்பர் 2ம் தேதி மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்ரம் லேண்டர் சந்திராயனில் இருந்து பிரியும்.

    மணமகள் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு போவது போல சந்திரயான் 2  பூமியில் இருந்து நிலவுக்கு சென்றுள்ளது. இது பெருமைகுரிய ஒரு நிகழ்வு.  நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி சந்திரயான் 2 தரை இறங்கப்போகிறது.

    வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி, திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில் சந்திரயான் 2 தரை இறக்கப்படும். இதற்கு உங்கள் அனைவரின் துணையும் அவசியம். எங்களுக்கு அது நல்ல எனர்ஜியாக இருக்கும்.

    எப்போதும் உறுதுணையாக இருங்கள். நிலவில் கால் பதித்து சந்திரயான் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க போகிறது. இந்த நிகழ்வை காண பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×