search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநகரில் வெறிச்சோடிய சாலையில் ராணுவ பாதுகாப்பு.
    X
    ஸ்ரீநகரில் வெறிச்சோடிய சாலையில் ராணுவ பாதுகாப்பு.

    காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு - 4 ஆயிரம் பேர் கைது

    காஷ்மீரில் மாநிலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு பக்கத்து மாநில சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொலை தொடர்பு மற்றும் இணைய தள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உமர்அப்துல்லா, மெகபூபா உள்பட 400 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அதோடு கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இத்தகைய அதிரடி காரணமாக காஷ்மீரில் வன்முறை ஏற்படுவது ஒடுக்கப்பட்டது. கடந்த 2 வாரமாக காஷ்மீரில் திருப்தி அளிக்கும் வகையில் அமைதி நிலவுகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் ஊரடங்கு விலக்கப்பட்டது.

    அதன் பிறகு பல பகுதிகளில் 144 தடையும் தளர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் 5 மாவட்டங்களில் தொலைபேசி சேவை வழங்கப்பட்டது. இணைய தள சேவையும் கொடுக்கப்பட்டது.

    காஷ்மீர் பிராந்தியத்தில் 35 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    காஷ்மீர்


    ராணுவத்தினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இந்த நிலையில் ஜம்மு பகுதியில் நேற்று காலை திடீரென இணைய தள சேவையை பயன்படுத்தி சிலர் வதந்தியை பரப்பினார்கள். கலவரத்தை உருவாக்கும் வகையில் சில காட்சிகளை வெளியிட்டிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து ஜம்மு பகுதியில் வழங்கப்பட்ட 2ஜி நெட்வொர்க் இணையத் தள சேவை நேற்று பிற்பகல் மீண்டும் முடக்கப்பட்டது. ஜம்மு போலீஸ் ஐ.ஜி. முகேஷ் சிங் இதுபற்றி கூறுகையில், “இணைய தளத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

    ஜம்முவில் இணைய தளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ காட்சி வெளியிட்டவரை போலீசார் தேடி வருகிறார்கள். ஸ்ரீநகரில் கல்வீச்சு நடந்த பகுதியில் ராணுவத்தினர் அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்கள் நடமாட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகளை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்வதற்கு ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கினார்கள்.

    ஸ்ரீநகர், ஜம்முவில் முக்கிய சாலைகள் சிலவற்றில் போக்குவரத்து இன்றும் தடை செய்யப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீரில் இன்று 16-வது நாளாக பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்த நிலையில் காஷ்மீரில் விரைவில் சகஜ நிலையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் கல்வீச்சு வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் யார்-யாரெல்லாம் கல்வீச்சில் ஈடுபடுவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அந்த அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் பணியை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் ஓசையின்றி மேற்கொண்டனர். நேற்று வரை 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த 4 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காஷ்மீரில் சுமார் 4 ஆயிரம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை பெயர் வெளியிட விரும்பாத மாஜிஸ்திரேட் ஒருவர் உறுதிப்படுத்தினார். இது தெடர்பாக அவர் கூறுகையில், “1978-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைக்கலாம். குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமலோ அல்லது எந்த விசாரணையும் நடத்தாமலோ பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்” என்றார்.

    பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். அது பாதுகாப்பு படையினரின் முடிவைப் பொருத்தது. இதையடுத்து கைதான 4 ஆயிரம் பேரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

    காஷ்மீரில் உள்ள சிறைகள் அனைத்தும் ஏற்கனவே கைதிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் விமானங்கள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், பணம் வாங்கிக் கொண்டு கல்வீச்சு சம்பவங்களை நடத்தியவர்கள் ஆவார்கள்.

    ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதன் முதல் படியாக காஷ்மீரில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×