என் மலர்

  செய்திகள்

  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
  X
  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

  காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் 15 நாட்களுக்கு பின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

  காஷ்மீர்:

  காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் 370, 35-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

  காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

  இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வரலாம், அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என கருதியதால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

  தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பொது போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டது. கலவரங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் ஆகியுள்ளன. இப்போது நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

  நேற்று மாநிலத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. ஓரளவு வாகனங்களும் இயங்கின.

  மொத்தம் 35 போலீஸ் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டு இருந்தது. வடக்கு பகுதியில் 15 போலீஸ் நிலையங்களிலும், மத்திய பகுதி, தெற்கு பகுதியில் தலா 10 போலீஸ் நிலைய பகுதிகளிலும் தடை உத்தரவை விலக்கி இருந்தனர்.

  இதன் காரணமாக அந்த பகுதிகளில் ஓரளவு கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு வந்து வாங்கி சென்றனர்.

  பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்பட வில்லை. ஆனால், தனியார் வாகனங்கள் பல இடங்களில் இயக்கப்பட்டன.

   

  காஷ்மீருக்கு 370 மற்றும் 35ஏ

  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து ஒரு சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

  ஒன்றிரண்டு இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி கலைய செய்தனர். பெரிய அளவில் எந்த வன்முறையும் நடக்கவில்லை.

  தகவல் தொடர்பிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. காஷ்மீரில் மொத்தம் 96 டெலிபோன் எக்சேஞ்சுகள் உள்ளன. அவற்றில் 17 எக்சேஞ்சுகளில் லேன்ட் லைன் டெலிபோன் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

  இதன் காரணமாக 50 ஆயிரம் டெலிபோன்கள் செயல்பட தொடங்கின. ஜம்மு பிராந்தியத்தில் ஜம்மு, சம்பா, கதுவா, உதம்பூர், ரியாசி ஆகிய 5 மாவட்டங்களில் 2-ஜி செல்போன் இண்டர் நெட் சேவை திரும்ப வழங்கப்பட்டது.

  அதே நேரத்தில் மற்ற இடங்களில் தொடர்ந்து இணையதள சேவை முடக்கப்பட்டு இருக்கிறது.

  மாநிலத்தில் நிலைமை முன்னேற்றம் அடைந்திருப்பது தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளரும், முதன்மை செயலாளருமான ரோகித் கன்சால் கூறியதாவது:-

  காஷ்மீரில் ஒவ்வொரு பகுதியிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருவதால் இயல்புநிலை திரும்பி வருகிறது. பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரித்து இருக்கிறது.

  இன்னும் மக்கள் வழக்கம் போல் நடமாடுவதற்கு உரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். பொது போக்குவரத்தையும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

  நாளை (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் ஆரம்ப பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும்.

  அரசு அலுவலகங்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும். குறிப்பிட்ட பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அந்தந்த பகுதி நிர்வாகமே கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதன்படி தேவைக்கு ஏற்றார் போல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறார்கள்.

  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலும் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் நடக்கவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக்சிங் கூறியதாவது:-

  காஷ்மீரில் 3-ல் ஒரு பகுதியில் இயல்புநிலை திரும்பி விட்டது. 144 தடை உத்தரவும் பல இடங்களில் விலக்கி கொள்ளப்பட்டது.

  காலை 7 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இவ்வாறு தடை உத்தரவுகள் விலக்கி கொள்ளப்பட்டன. சில இடங்களில் மட்டும் ஒன்றிரண்டு பேர் கல் வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டார்கள். அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

  பெரிய அளவில் கூட்டங்கள் திரண்டு வந்து போராடுவது போன்ற எந்த சம்பவங்களும் நடை பெறவில்லை.

  மாநிலம் முழுவதும் அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை விடுவிப்பது தொடர்பாக அந்த பகுதி நிர்வாகமே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஆனாலும், தடைகள் விலக்கப்பட்டு வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் போது போராட்டங்கள் நடைபெறலாம் என கருதி பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினராக தென்படுகிறார்கள்.

  ஸ்ரீநகரில் பழைய நகர் பகுதியில் ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனாலும், மற்ற பகுதிகளில் இன்னும் பதட்டமான நிலையே நிலவுகிறது.

  காஷ்மீரில் இருந்து புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற 300 பேர் நேற்று விமானத்தில் திரும்பினார்கள்.

  அவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல போலீசார் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

  Next Story
  ×