search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருப்பதியில் பலத்த மழையால் பக்தர்கள் அவதி

    திருப்பதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவையொட்டி விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவாரிமொட்டு, அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இலவச தரிசன பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்துக்கு 5 மணி நேரமும், டைம் ஸ்லாட் முறையில் தரிசனம் செய்தவர்களுக்கு 5 மணி நேரமும், திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 மணி நேரமும் ஆனது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள், அன்னதான மண்டபம், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று இரவே பக்தர்கள் திருப்பதி வந்து தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் திருப்பதியில் விடிய விடிய மழை பெய்தது. மழையால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று குவிந்தனர். நேற்றிரவு 11 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்ததால் திறந்த வெளியில் தங்கியிருந்த பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குளிர் வாட்டி எடுத்து வருகிறது.

    இதனால் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதி அடைந்தனர். இந்த மழையால் திருப்பதியில் உள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×