என் மலர்

  செய்திகள்

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசிய போது எடுத்த படம்.
  X
  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

  பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார். மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட விரைவில் மத்திய குழு கர்நாடகம் வருகிறது.
  பெங்களூரு :

  கர்நாடகத்தில் கனமழை பெய்ததால், வட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

  இதில் 62-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 7 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். சுமார் 4 லட்சம் பேர் 1,200-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மழை நின்றுவிட்டது. தற்போது வெள்ளம் வடிந்து வருவதால், நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தங்களின் கிராமங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

  அதனால் நிவாரண முகாம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 943 நிவாரண முகாம்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. அதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 243 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் நேரில் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர்.

  அப்போது அமித்ஷாவிடம் எடியூரப்பா, ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இடைக்கால நிவாரணமாக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு இதுவரை சிறப்பு நிதி தொகுப்பை அறிவிக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

  இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ள இடைக்கால நிவாரண நிதியை உடனே ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காலை 10 மணிக்கு பிரதமரை சந்தித்த எடியூரப்பா 45 நிமிடங்கள் அவருடன் விவாதித்தார்.

  இந்த சந்திப்பின்போது, தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கூடுதல் தலைமை செயலாளர் ரவிக் குமார், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் மந்திரிகள் ஆர்.அசோக், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயற்கை பேரிடர், கர்நாடகத்தை கடுமையாக தாக்கியுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு மாநிலத்தில் கடும் வறட்சி இருந்தது. இப்போது அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. மராட்டிய மாநிலம் உபரிநீரை திறந்துவிட்டதால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்.

  பிரதமர் நாங்கள் கூறிய விவரங்களை புரிந்து கொண்டார். வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை பிரதமர் அனுப்ப உள்ளார். நிவாரண பணிகளுக்கு இடைக்கால நிவாரண நிதியை மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும். இதுபற்றி ஆலோசனை நடத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். வெள்ள பாதிப்பு குறித்து ஏற்கனவே விவரங்களை சேகரித்து வைத்திருந்தார். அவருக்கு கர்நாடகத்தின் நிலைமை குறித்து தெரியும்.

  இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

  இதைதொடர்ந்து எடியூரப்பாவிடம் நிருபர்கள், “ரூ.3,000 கோடி இடைக்கால நிதியாக வழங்குமாறு நீங்கள் கேட்டது குறித்து பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா?”என்று கேள்வி எழுப்பினர்.

  அதற்கு மழுப்பலாக பதிலளித்த எடியூரப்பா, “ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகள், சாலைகள், பாலங்களை சரிசெய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்தும் பிரதமரின் கவனத்திற்கு தெரியப்படுத்தினோம்” என்றார்.

  கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று 20 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. எனவே மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை இன்று (சனிக்கிழமை) எடியூரப்பா சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, புதிய மந்திரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலுக்கு அமித்ஷா ஒப்புதல் வழங்குவார்.

  அதன் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக 16 மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்றும், மீதமுள்ள 17 இடங்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்காக காலியாக வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே, மந்திரி பதவியை ஏற்க முடியும். இல்லாவிட்டால் இடைத்தேர்தல் வரை அவர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
  Next Story
  ×