search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    போன் ஒட்டு கேட்பு விவகாரம்- குமாரசாமிக்கு எதிராக திரும்பிய காங்கிரஸ்

    கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்போது, பல்வேறு தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்ட புகார் தொடர்பாக விசாரிக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி எடுத்த போது அதில் இருந்து தப்பிக்க குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார்.

    ஆனாலும், அவரால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    தனது அரசை காப்பாற்றுவதற்காக குமாரசாமி பல்வேறு அரசியல் தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்டதாக முன்னாள் ஜனதாதளம் மாநில தலைவரும், அதிருப்தி எம்.எல்.ஏ.வாக மாறியவருமான விஸ்வநாத் குற்றம் சாட்டி உள்ளார்.

    மொத்தம் 300 தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்டதாகவும், தனது சொந்த கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் என அனைவருடைய போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக அவர் கூறினார்.

    சித்தராமையா

    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா போன்கூட ஒட்டு கேட்கப்பட்டது. எடியூரப்பா போனையும் ஒட்டு கேட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

    அனைவருடைய போன்களையும் போலீசார் டேப் செய்து அதில், முக்கியமான தகவல்கள் இருந்தால் குமாரசாமிக்கு தெரிவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    குமாரசாமி இதுபற்றி கூறும்போது, நான் யாருடைய போனையும் ஒட்டு கேட்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார்.

    ஆனால், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களின் போனையே ஒட்டு கேட்டதாக கூறப்படுவதால் காங்கிரஸ் தலைவர்களே குமாரசாமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இது சம்பந்தமாக மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் மிக முக்கியமானது.

    இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில், யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    சித்தராமையா கூறும் போது, இதில், என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தட்டும். யாராவது தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறினார்.

    பாரதிய ஜனதா மூத்த தலைவர் அசோகா கூறும் போது, இது சம்பந்தமாக சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

    மாநில மதசார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.கே. குமாரசாமி (வேறு நபர்) கூறும்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

    ஏற்கனவே எங்கள் கட்சியில் முன்னாள் தலைவராக இருந்தவரே இந்த குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது.

    பொதுவாக மத்திய புலனாய்வு துறையினர்தான் இதுபோல் போன்களை ஒட்டு கேட்பது உண்டு. மாநில போலீசார் இது போன்று ஓட்டு கேட்பதில்லை என்று கூறினார்.
    Next Story
    ×