search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்
    X
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர்

    ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக கூறிவிட்டது.
    புதுடெல்லி:

    இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

    காஷ்மீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிவிட்டனர்.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பான சில வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. 

    அப்போது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எம்.எல்.சர்மா என்ற வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆய்வு செய்த தலைமை நீதிபதி, அவரது மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார். 

    உச்ச நீதிமன்றம்

    மேலும், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும்? உங்கள் கோரிக்கை என்ன? என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். இதேபோல் மற்ற 5 மனுக்களிலும் குறைபாடுகள் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 

    அப்போது காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருப்பதால், கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 

    மேலும் மனுக்களில் குறைபாடுகளை சரிசெய்து, மீண்டும் தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர்களிடம் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×