search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் திட்டத்தை தொடங்கி வைத்த எடியூரப்பா

    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
    பெங்களூரு :

    ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது.

    அதன்படி பிரதமரின் ‘கிசான் சம்மான்’ நிதி உதவி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த 26-ந் தேதி பதவி ஏற்ற எடியூரப்பா, பதவி ஏற்றதும் பிரதமரின் ‘கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் தவிர கர்நாடக அரசு சார்பில் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    மேலும் அந்த தொகை 2 தவணையாக தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் ரூ.6,000 அதோடு கர்நாடக அரசு வழங்கும் ரூ.4 ஆயிரத்தையும் சேர்த்து கர்நாடக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என்றும் எடியூரப்பா அறிவித்து இருந்தார்.

    அதன்படி இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. விழாவில் கர்நாடக விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.4,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் ‘கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் கர்நாடக விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி இந்த திட்டத்தை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளேன்.

    முதல்கட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி உதவியாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. அடுத்து வரும் நாட்களில் மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும். 2-வது தவணை அடுத்த மாதம் வழங்கப்படும். எங்கள் அரசு, விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் அரசு. அதனால் இந்த திட்டத்தை நான் அறிவித்தேன்.

    ‘பிரதமர் கிசான் சம்மான்’ திட்டத்தின் கீழ் நாட்டில் வேறு எந்த மாநிலமும் விவசாயிகளுக்கு கூடுதல் நிதி உதவியை வழங்கவில்லை. 44.93 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்திற்காக பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு இதுவரை 34.28 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி நிதிச்சுமை ஏற்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×